மயிலாடுதுறையில் அரசு ஊழியர், டாக்டர், நர்ஸ் என்று சொல்லி 4 பேரை திருமணம் செய்து கொண்டு, 5வதாக சீர்காழி வங்கி ஊழியரை திருமணம் செய்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கைதான பெண் குறித்து பல்வேறு தகவல்கள் காவல்துறை தரப்பிலிருந்து வெளியாகி வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி திட்டையை சேர்ந்த சிவசந்திரன் (வயது 35) எம்ஏ, பிஎட் படித்துள்ளார். இவரிடம் தன்னை டாக்டர் என்று அறிமுகமான 29 வயது இளம்பெண், நாளடைவில் அவரிடம் நெருங்கி பழகி திருமணம் செய்து கொண்டார் .
இந்த திருமணத்தை தடபுடலாக செய்துள்ளார் சிவசந்திரன், அந்த திருமணத்தின்போது சிவசந்திரனின் நண்பர்கள் ஏராளமான பேனர்கள் வைத்திருக்கிறார்கள்.இந்த பேனர்கள் தான் இணையதளத்தில் பரவியிருக்கிறது.
இதை பார்த்த, இளம்பெண்ணின் முன்னாள் கணவரில் ஒருவரான நெப்போலியன் அதிர்ச்சியடைந்து போலீசுக்கு போயிருக்கிறார். தன்னையும் திருமணம் செய்து ஏமாற்றிய அந்த பெண்ணின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார் .
இந்த புகாரை சீர்காழி போலீசார் விசாரித்தபோதுதான், 29 வயது இளம்பெண்ணின் மொத்த மோசடியும் அம்பலமானது. இதுபோல் ஏற்கனவே 4 பேரை திருமணம் செய்ததுடன், 5வதாக இளம்பெண்ணிடம் வாக்கப்பட்டவர்தான் சிவச்சந்திரன். 5 ஆண்களை ஏமாற்றிய பெண்ணை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

இந்நிலையில், அப்பெண் குறித்த சில தகவல்கள் வெளியாகியிருக்கிறது. சீர்காழி அடுத்துள்ள கொடியம்பாளையம் என்ற மீனவ கிராமத்தை சேர்ந்தவர் இப்பெண். பார்ப்பதற்கு வசீகர தோற்றமும், உடல்வாகும் கொண்டவர்.. வழக்கமாக எப்போது வெளியில் சென்றாலும், சாலையில் செல்லும் ஆண்களிடம் லிப்ட் கேட்பாராம். டூவீலர், கார்களில் லிப்ட் கேட்டு ஏறிவிடுவார்.
லிப்ட்: அப்படி அவர்களுடன் செல்லும்போது, மெல்ல பேச்சை துவங்குவாராம்.. தன்னை டாக்டர் என்று சொல்லித்தான் பேச்சை துவங்குவாராம். தன்னுடைய பேச்சில் விழும் ஆண்களுடன் மட்டும் அடிக்கடி பேசி, காதல் வலையை விரிப்பாராம். அப்படி ஒருநாள் லிப்ட் கேட்டு சிக்கியவர்கள் தான் சிவசந்திரன்.. பைக்கில் லிப்ட் கேட்டு போகும்போதுதான் தன்னை டாக்டர் என்று சொல்லி உள்ளார். முன்னாள் கணவரான சிதம்பரத்தை சேர்ந்த ராஜாவும் பைக்கில் லிப்ட் கேட்டு சிக்கியவர்தான்.
அரசு அதிகாரி போலவே சிலரிடம் நடிப்பாராம். ஆனால், பெரும்பாலும் தன்னை எம்பிபிஎஸ் டாக்டர், எம்எஸ் முடித்துள்ளதாக அறிமுகப்படுத்தி கொள்வாராம். ரூ.50,000 சம்பளம் வாங்குவதாக சொல்லவும், இதில்தான் பல ஆண்கள் விழுந்துள்ளார்கள். இதில் ஹைலைட் என்னவென்றால், கரூரை சேர்ந்த ஒருவர், இந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறாராம். இந்த பெண்ணுக்கு மாத மாதம் குடும்ப செலவுக்காக ரூ.50,000 அனுப்பி வைத்து கொண்டிருக்கிறாராம்.
சம்பளம் ரூ.50,000: கரூர்காரர் வெளிநாட்டிலிருந்து அனுப்பி வைத்துக் கொண்டிருக்கும் இந்த பணத்தைதான், தன்னுடைய சம்பளம் என்று மற்ற கணவர்களை ஏமாற்றி வந்துள்ளார்.
டாக்டர் மனைவி என்பதால், மொத்த கணவர்களும், விழுந்து விழுந்து, இந்த மனைவியை கவனித்துள்ளனர்.
தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து தந்துள்ளனர்..
இதில் ஒரு கணவர் வீட்டில் டாய்லெட் இல்லையாம்.. தன்னுடைய டாக்டர் மனைவிக்கு, வீட்டில் வளர்த்து வந்த மாடுகளை விற்று மாடல் டாய்லெட் கட்டி கொடுத்துள்ளார்…
டாய்லட்: “எங்க வீட்டில் காதல் என்றாலே பிடிக்காது, வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்ள வேண்டும்” என்று சொல்லியே, ஒவ்வொரு ஆணையும் திருமணம் செய்துள்ளார்.. இதனால் சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் யார் என்றே, இந்த கணவன்களுக்கு தெரியாமல் போய்விட்டதாம்.. சிதம்பரம், ஈரோடு உள்ளிட்ட பல ஊர்களில் பல ஆண்களை தன் வலையில் வீழ்த்தி ஏமாற்றி திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளதால், அதுகுறித்த விவரங்களை போலீசார் திரட்டி கொண்டிருக்கிறார்கள்.