ஈரோடு செட்டிபாளையம் தெற்கு ஸ்டேட் பேங்க் நகரில், எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினரான என்.ராமலிங்கம் என்பவருக்குச் சொந்தமான கட்டுமான நிறுவனம் உள்ளது. என்.ராமலிங்கத்தின் மகன், எடப்பாடி பழனிசாமியின் மகனான மிதுனின் சகலை முறையாகும். என்.ராமலிங்கத்தின் இளைய மகனுக்கும், ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்ற தொழிலதிபரின் இளைய மகளுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. சுப்பிரமணியம் வீட்டில் தான் எடப்பாடி பழனிசாமியும் தனது மகனுக்குப் பெண் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ராமலிங்கத்தின் கட்டுமான நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உட்பட கோவை, பெங்களூருவில் உள்ள அவருக்குத் தொடர்புடைய அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் கடந்த 7-ம் தேதி முதல் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
ஈரோட்டில் உள்ள அவரது தலைமை அலுவலகம், வேலாங்காட்டு வலசு பகுதியில் உள்ள ராமலிங்கத்தின் வீடு, சென்னை ஆகிய 26 இடங்களில் கடந்த 5 நாட்களாக நடைபெற்ற சோதனை நடந்தது. இதேபோல், மரவள்ளிக்கிழங்கு அரவை ஆலையில், எடப்பாடி பழனிசாமியின் அக்கா மகனான வெற்றிவேல் முதன்மை இயக்குநராகப் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, கடந்த 5 நாட்களாக நடந்துவந்த வருமானவரித் துறை சோதனை நேற்று நிறைவடைந்தது.
தமிழகம் முழுவதும் 26 இடங்களில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் காட்டாத ரூ.10 கோடி ரொக்கப் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், ஈரோடு ராமலிங்கம் கன்ஸ்ட்ரக்ஷன் தொடர்பான இடங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் 700 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்துள்ளது.