சட்டசபை தேர்தலின்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 ரொக்கப்பணம் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ந்தேதி வழங்கப்படும் என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
சட்டசபை தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து கடந்த 7-ந்தேதி முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றுக் கொண்டார்.
அவர் பதவி ஏற்றதும் முதல் கையெழுத்தாக கொரோனா நிவாரண நிதி உதவி வழங்கும் கோப்பில் கையெழுத்திட்டார். கொரோனா பாதிப்பால் மக்கள் சிரமப்படும் இந்த சூழலில் ரூ.4 ஆயிரத்தில் இந்த மாதமே முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் வகையில் ஆணை பிறப்பித்தார். இதைத்யொட்டி அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. தேவையான நிதியும் ஒதுக்கப்பட்டது.
இதைதொடர்ந்து ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) நண்பகல் 12 மணி அளவில் சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார். தலைமை செயலகத்துக்கு பயனாளிகளை நேரில் வரவழைத்து அவர்களுக்கு ரொக்கப்பணமாக ரூ.2 ஆயிரம் வழங்கினார். பணத்தை பெற்றுக்கொண்டவர்கள் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் மூத்த அமைச்சர்கள், தலைமை செயலாளர் இறையன்பு, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா நிவாரணமாக ரூ.2 ஆயிரம் வழங்கியதை தொடர்ந்து ஒவ்வொரு பகுதியிலும் ரேஷன் அரிசி கார்டுதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்குவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இதையொட்டி இன்று முதல் டோக்கன் வழங்கும் பணி வீடு வீடாக வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடை ஊழியர்கள் அந்தந்த பகுதிகளுக்கு வந்து ரேஷன் கார்டு எண் அடிப்படையில் டோக்கன் வழங்கி வருகின்றனர்.
அந்த டோக்கனில் ரேஷன் கடையின் எண், அட்டைதாரரின் பெயர், நிவாரண நிதி வழங்கும் தேதி, நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டு உள்ளன.
அந்த டோக்கனில் நம்மையும், நாட்டு மக்களையும் காப்போம். தொற்றில் இருந்து மீட்போம் என்கிற கொரோனா விழிப்புணர்வு வாசகமும் இடம்பெற்றுள்ளது.
டோக்கன் 12-ந்தேதி வரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டோக்கனை பெற்றுக்கொண்டவர்கள் வருகிற 15-ந்தேதி முதல் ரேஷன் கடைகளுக்கு சென்று ரூ.2 ஆயிரம் பணம் பெற்றுக் கொள்ளலாம். டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி, நேரப்படி தான் பொதுமக்கள் வரவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள் ளது.
கூட்டத்தை தவிர்க்க ஒரு நாளைக்கு 200 பேர்களுக்கு மட்டுமே பணம் வினியோகம் செய்யப்படும். சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் ஒவ்வொரு ரேஷன் கடை முன்பும் வட்டம் வரையப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு முன்னுரிமை அளித்து ரேஷன் கடைகளில் பணம் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.