ஏற்கனவே ரூ.18 ஆயிரம் பாக்கி. மீண்டும் இலவசமாக வாகனத்தை பழுதுநீக்கம் செய்து தரச்சொல்லி ஊழியரை தாக்கிய காவலர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள வாடிப்பட்டி பகுதியில், ஸ்ரீனிவாசன் என்பவர் இருசக்கர வாகன பழுது நீக்கம் செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அவ்வப்போது வரும் பாலமேடு காவல்நிலைய சார்பு ஆய்வாளர் அண்ணாதுரை, தனது இருசக்கர வாகனத்தை இலவசமாக பழுது நீக்கம் செய்து கொடுக்குமாறு மிரட்டி வந்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டையைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன், மதுரை வாடிப்பட்டி பகுதியில் மெக்கானிக் கடை நடத்தி வந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னதாக ஸ்ரீனிவாசனின் கடையில் அறிமுகத்தை ஏற்படுத்திய அண்ணாதுரை, தனது புல்லட் ரக இருசக்கர வாகனத்தை பழுதுநீக்க கொடுத்துள்ளார்.
அண்ணாதுரை, தொடர்ந்து தனது மிரட்டல் பேச்சு, பிரச்சனை வந்தால் பார்த்துக்கொள்கிறேன் என கட்டாயப்படுத்தி பழுதுநீக்கம் செய்ய வைத்துள்ளார். இதனால் ஒரு கட்டத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட ஸ்ரீனிவாசன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
மேலும், தற்போது வரை ரூ.8,000 வரை பாக்கி வைத்துள்ள அண்ணாதுரை, சமீபத்தில் ரூ.10 ஆயிரம் அளவுக்கு வேலை வைத்துள்ளார். இதனால் பணத்தை கொடுத்துவிட்டு வாகனத்தை எடுத்துக்கொள்ளுங்கள், இலவசமாக வண்டியை துடைத்து தரலாம் வாட்டர் சர்வீஸ் செய்து தரலாம் , நட்டு போல்ட்டு லூசாக இருந்தால் டைட் செய்து தரலாம் நான் தினமும் கிடைக்கும் சிறு பணத்தில் ஆட்டோமொபைல்ஸ் கடைக்கு சென்று புதியதாக பொருட்களை எனது பணத்தில் வாங்கி உங்கள் வண்டிக்கு செலவு செய்ய என்னிடம் போதுமான வசதி இல்லை என பலமுறை கூறியும் சார்பு ஆய்வாளர் தொடர்ந்து மிரட்டும் செயலில் தான் ஈடுபட்டு வந்துள்ளார் மொத்தம் 18000 ரூபாய் தந்துவிட்டு வாகனத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என ஸ்ரீனிவாசன் கூறியதால், ஜனவரி 04 அன்று காவல் அதிகாரி அண்ணாதுரை, ஸ்ரீனிவாசன் மற்றும் அவரின் பணியாளர்களை தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்த வீடியோ ஆதாரத்துடன் புகார் அளிக்கப்படவே, காவல்துறையினர் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர். மேலும், வீடியோ ஆதாரத்துடன் சார்பு ஆய்வாளர் சிக்கிக்கொண்ட காரணத்தால், அவர் பணியிடைநீக்கம் செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.