புத்தாண்டு குடிகாரர்களின் கூடாரமாக மாறிவிட்டது என சிலர் புலம்புவதை அவ்வப்போது கேட்கலாம். அதுவும் ஓரளவு உண்மைதான் என்பதை மெய்ப்பிப்பது போன்று ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது .
குடிக்க பணம் கேட்டு தராததால், குடிமகன் ஒருவர் கரண்ட் கம்பத்தில் ஏறி கம்பியில் படுத்து சாகசம் செய்த காட்சிகள் தற்போது இணையத்தில் ட்ரெண்ட்..
தமிழ்நாடு என்றில்லை மது விற்கும் பல மாநிலங்களில் அதிகாலையிலேயே மது அருந்திவிட்டு அலப்பறை செய்யும் குடிமகன்களால் பொதுமக்கள் கடும் இன்னலை சந்திக்கின்றனர். மேலும் சாலைகளில் அவர்கள் செய்யும் அட்டகாசத்திற்கு அளவே கிடையாது.
ஒவ்வொரு நாளும் மது அருந்திவிட்டு குடிமகன்கள் செய்யும் அட்டகாசத்தால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்திருக்கும் நிலையில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்திருக்கிறது.
கட்டாந்தரையில் நீச்சல் அடிப்பது, ஓடும் பஸ்ஸை முட்டி நிறுத்துவது, நாய்களை கட்டிப்பிடித்து தூங்குவது என குடிமகன்களின் பல்வேறு அட்டகாசங்களை பார்த்திருப்போம். குறிப்பாக தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற நாட்களில் குடிப்பதற்கு என்றே ஒதுக்கப்பட்டது போல சிலர் காலை முதல் இரவு வரை குடித்து குளிக்கின்றனர்.
அந்த வகையில் ஆந்திராவில் குடிமகன் ஒருவர் செய்த அட்டகாசம் தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. மது கொடுத்தே தீர வேண்டும் என வெறிகொண்டு அந்த இளைஞர் கரண்ட் கம்பத்தில் ஏறி இருக்கிறார். ஆனால் அந்த கிராம மக்கள் உடனடியாக மின் இணைப்பை துண்டித்ததால் அவர் உயிர் தப்பினார். ஆந்திர மாநிலம் மணியன் அருகே சிங்கிபுரம் கிராமத்தில் தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.
அந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞரான வெங்கண்ணா முழு நேர மதுவிற்கு அருமையானவர் என சொல்லப்படுகிறது. ஆண்டு இறுதியான டிசம்பர் 31ஆம் தேதி முழுவதும் மது குடித்த அவர் புத்தாண்டையும் மதுவிலேயே குடித்துக் கொண்டாட வேண்டும் என திட்டமிட்டு இருக்கிறார். ஆனால் கையில் காசு இல்லை. எனவே தனது தாயிடம் சென்று பணம் கேட்டிருக்கிறார். ஆனால் மது குடிப்பதற்கு எல்லாம் பணம் தர முடியாது என அவரது தாய் அவரை திட்டி அனுப்பி இருக்கிறார்.
ஆனால் எப்படியாவது குடித்தாக வேண்டுமே என்ன செய்வது என திட்டமிட்ட அவர் தாயை மிரட்டி பணம் பறிக்கலாம் என திட்டமிட்டு இருக்கிறார். இதை அடுத்து வீட்டின் அருகே இருந்த மின்கம்பத்தில் சரசரவென வேகமாக ஏறி இருக்கிறார். புத்தாண்டில் ஏதும் பிரச்சனை வந்து விடுமோ என அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக டிரான்ஸ்பார்மரில் மின் இணைப்பை துண்டித்திருக்கிறார்கள். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதற்கிடையே வெங்கண்ணா வேகமாக மின்கம்பத்தில் ஏறி வயர்களில் ஏதோ பஞ்சு மெத்தையில் படுப்பது போல படுத்துக் கொண்டார். இதை அடுத்து விழுந்து விடுவாரோ என அச்சப்பட்டு அருகில் இருந்தோர் அவரை கீழே இறங்கி வருமாறு கூறினார். ஆனால் எவ்வளவோ கெஞ்சியும் அவர் இறங்கி வரவில்லை. இதை அடுத்து குடிப்பதற்கு பணம் தருவதாக கூறியதை தொடர்ந்து சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு அந்த இளைஞர் கீழே இறங்கி வந்தார். இதனால் அங்கு பதட்டம் குறைந்தது. இந்த நிலையில் வெங்கண்ணாவின் சேட்டைகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.