Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வரும் 2ம் தேதி அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாநகரில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை கிழித்து எறியும் மாநகராட்சி ஊழியர்கள், பின்னணியில் மேயர் அன்பழகன் ?

0

 

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் பிறந்தநாளையொட்டி திருச்சி மாநகரில் ஒட்டப்பட்ட வாழ்த்துப் போஸ்டர்களை மாநகராட்சி ஊழியர்கள் கிழித்து அகற்றியது திருச்சி தி.மு.க-வில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

வரும் டிசம்பர் 2ஆம் தேதி அமைச்சர் அன்பில் மகேஸின் 47வது பிறந்தநாள் விழாவுக்கான ஏற்பாடுகளை திருச்சி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதன் ஒரு பகுதியாக திருச்சியின் பல்வேறு பகுதிகளில் அவரது ஆதரவாளர்கள் சார்பில் போஸ்டர்கள் அடித்து ஒட்டப்பட்டுள்ளன. தற்போது அந்த போஸ்டர்களை மாநகராட்சி நிர்வாகம் தனது ஊழியர்களை வைத்துக் கிழித்து, அகற்றும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. அமைச்சர் பிறந்தநாள் போஸ்டரையே கிழிக்கும் அளவுக்கு என்ன நடந்தது

“திருச்சி மேயர் அன்பழகனின் தூண்டுதலில்தான் இந்தப் போஸ்டர்கள் கிழிக்கப்படுவதாக எங்களுக்குச் சந்தேகம் இருக்கிறது” எனப் பேசத் தொடங்கினர் தெற்கு மாவட்ட திமுகவினர் .

“திருச்சி மாநகராட்சி தேர்தலில் ஐந்தாவது முறையாக வெற்றிபெற்ற அன்பழகன் தி.மு.க தலைமையால் மேயராகத் தேர்வு செய்யப்பட்டார்.

மொத்தம் 65 வார்டுகள் கொண்ட மாநகராட்சியில் பெரும்பாலான கவுன்சிலர்கள் அமைச்சர் அன்பில் மகேஸின் ஆதரவாளர்கள்தான். அமைச்சரின் ஆதரவினால் மேயரான அன்பழகன் தற்போது அமைச்சருக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது எங்களைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது.

அதுமட்டுமல்ல, இதுவரை திருச்சி மாநகரில் ஒட்டப்பட்ட மற்ற எந்த திருமணம், பிறந்தநாள் போன்ற எல்லா போஸ்டர்களும் அந்த தேதிக்கு முன்னர் கிழிக்கப்பட்டதே இல்லை. அப்படியிருக்கும்போது அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் போஸ்டர்கள் மட்டும் பிறந்தநாள் தேதிக்கு முன்னரே கிழிக்கப்படுவது யாரையோ திருப்திப்படுத்த அன்பழகன் செய்யும் தேவையில்லாத அரசியல் என்றே தோன்றுகிறது.

இதன்மூலம் திருச்சியில் தேவையில்லாத கோஷ்டி மோதல் உருவாகும் சூழலையும் ஏற்படுத்தியிருக்கிறது. விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்ற தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

மற்றொரு புறம் சட்டமன்றத் தேர்தலுக்குத் தலைமை தீவிரமாகத் தயாராகி வருகிறது. இந்தச் சூழலில் மேயர் அன்பழகனின் இந்தச் செயல் திருச்சி தி.மு.க-வில் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும்” எனக் கொதிக்கிறார்கள்.

இது குறித்து மாநகராட்சி தரப்பில் கேட்டால், “இதில் எந்த அரசியல் பின்னணியும் இல்லை” பொதுவான சாலை ஓரம் உள்ள சுவர்களில் ஒட்டி உள்ள விளம்பர போஸ்டர்களை கிழிப்பது நார்மலான ஒன்றுதான் என கூறுகின்றனர் .

ஆனால் அமைச்சர் கேஎன். நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு ஒரு மாதத்திற்கு முன்பே ராட்ச பேனர்களும் போஷர்களும் திருச்சி மாநகரம் முழுவதும் வைக்கப்பட்டது . தற்போது வரும் 12ஆம் தேதி பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு பிறந்தநாளுக்கு திருச்சி மாநகர முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் இதுவரை கிழிக்கப்படவில்லை, ராட்ச பேனர்களும் அகற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

Leave A Reply

Your email address will not be published.