திருச்சி விமான நிலையத்தில் ரூ. 82 லட்சம் மதிப்புள்ள கடத்தல் சிகரெட் மற்றும் தங்கம் பறிமுதல் .5 பேர் சிக்கினார்
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், சவுதி அரேபியா போன்ற உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மலேசியத் தலைநகா் கோலாலம்பூரில் இருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு புதன் நள்ளிரவு ஏா் ஏசியா விமானம் வந்தது.
இதில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த மூன்று பயணிகளின் உடமைகளில் சோதனை செய்ததில் தங்கத்தை கம்பிகள் உள்ளிட்ட வடிவங்களில் மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது.
இதன் மதிப்பு ரூ.73.45 லட்சம் ஆகும்.
இதையடுத்து தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, 3 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல், சார்ஜாவிலிருந்து ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், மற்றும் மலேசியாவிலிருந்து ஏா் ஏசியா விமானத்தில் வந்த பயணிகள் இருவா் உரிய அனுமதியின்றி கொண்டு வந்த ரூ.9.43 லட்சம் மதிப்புள்ள 200 பாக்கெட் சிகரெட்டுகளையும் சுங்கத் துறையினா் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.