Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கே கே நகரில் போலீசார் மீது கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது..

0

 

திருச்சி கே.கே.நகரில் உள்ள மாநகர காவல் ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடைபெற்ற கலவரத் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சிக்காக போலீஸ்காரர்கள் கலவரக்காரர்கள் போல வேடமிட்டு பங்கேற்றனர்.

திருச்சி மாநகரில் திருவிழா மற்றும் பண்டிகை நாட்களில் மாநகர ஆயுதப்படை காவலர்களுக்கு சட்டவிரோதமாக கூடும் கூட்டத்தை எப்படி கையாள்வது என்பது குறித்த ஒத்திகை (MOB operation) மற்றும் அதனால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு முதலுதவி செய்வது உள்ளிட்ட ஒத்திகையானது திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடைபெற்றது.

மாநகர காவல் ஆணையர் என்.காமினி மேற்பார்வையில் நடைபெற்ற இந்த தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் சட்டம் – ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து மற்றும் ஆயுதப்படை காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் என 575 பேர் கலந்து கொண்டனர்.

துணை ஆணையர்கள் செல்வகுமார் (வடக்கு), அரவிந்தன் (தலையிடம்), கூடுதல் துணை ஆணையர் திருமலைக்குமார் (ஆயுதப்படை) ஆகியோர் உடனிருந்தனர். இதுபோன்ற சட்டவிரோத கூட்டத்தை கையாளும் ஒத்திகையின் போது திருச்சி மாநகர காவல்துறையினர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என ஆணையர் காமினி அறிவுரை வழங்கினார்.

இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் சட்டவிரோத கும்பல் போல போலீஸார் வேடமிட்டு, சாதாரண உடை அணிந்து கொண்டு கல், கட்டை போன்றவற்றை வீசி கலவரத்தில் ஈடுபட்டனர். மேலும் டயர்களை தீயிட்டு கொளுத்தினர்.

கலவரத்தை தடுக்கும் முயற்சியில் திருச்சி மாநகர போலீஸார் ஈடுபட்டனர். இதற்காக வஜ்ரா வேன் பயன்படுத்தப்பட்டது. அதிலிருந்து கலவரக்காரர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. மேலும் கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. பின்னர் கலவரம் குறித்து வருவாய்துறை அலுவலர் ஒருவர் போலீஸாரிடம் விசாரித்தார். பின்னர் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

இந்த போலிக் கலவரத்தை காணும் போது ஏதோ உண்மைக் கலவரம் போல தத்ரூபமாக இருந்தது. அண்மையில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் கூட்ஸ் ஷெட் ரயில்வே பகுதியில் நடத்திய ஒத்திகை நிகழ்ச்சியை அடுத்து தற்போது போலீஸார் நடத்திய ஒத்திகை நிகழ்ச்சியும் தத்ரூபமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.