2 குழந்தைகளின் தாயை மயக்கம் மருந்து கொடுத்து மீண்டும் மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்த திருச்சி ரயில்வே காவலர் மீது வழக்குப் பதிவு .
திருச்சியில் திண்டுக்கல்லை சேர்ந்த செவிலியரை, ரயில்வே காவல்துறையில் பணியாற்றும் காவலர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அதனை வீடியோவாக எடுத்து மிரட்டியதாக காவலர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர் போலீசார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா அய்யலூர் கருவார்பட்டியை சேர்ந்தவர் சதீஷ்ராஜா. இவர் திருச்சி ரயில் நிலையத்தில் செயல்பட்டு வரும் இருப்புப் பாதை காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார்.
தற்போது இவர் மணப்பாறையில் வசித்து வரும் நிலையில், சதீஷ்ராஜாவின் சொந்த ஊருக்கு அருகே வசிக்கும் லலிதா (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. லலிதா தினமும் ரயில் மூலம் திருச்சிக்கு பணிக்கு செல்வது வழக்கமாம்.
லலிதா திருச்சியில் ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக உள்ள நிலையில் அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் லலிதா வேலைப் பளு காரணமாக தான் பணியாற்றும் மருத்துவமனையிலேயே விடுதியில் தங்கி இருந்தார். வாரம் ஒருமுறை ஊருக்கு சென்று குழந்தைகளை பார்த்து வருவது வழக்கம். இந்த நிலையில் லலிதா அய்யலூரில் இருந்து திருச்சி மருத்துவமனைக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த பஸ்சில் வந்த சதீஷ்ராஜா அவரிடம் பேச்சு கொடுத்தார். அப்போது நாம் இருவரும் ஒரே பள்ளியில் ஒன்றாகத் தானே படித்தோம் எனக் கூறி பேசியுள்ளார். இந்நிலையில் பின்பு அவரது செல்போன் எண்ணையும் வாங்கிக்கொண்டார். நட்பு ரீதியாக அவர்கள் இருவரும் பேசியுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் காவலர் சதீஷ்ராஜா, செவிலியர் லலிதாவை சமயபுரம் டோல்கேட்டில் உள்ள ஒரு தனியார் ஓட்டலுக்கு காபி சாப்பிட அழைத்து சென்றார்.
தொடர்ந்து ஓட்டலில் ரூம் எடுத்த சதீஷ்ராஜா லலிதாவுக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது.அந்த குளிர்பானத்தை அருந்தியதும், மயங்கிய லலிதாவை அதே அறையில் அடைத்து வைத்து சதிஷ்ராஜா மீண்டும் மீண்டும் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
மயக்கம் தெளிந்து சத்தம் போட்ட லலிதாவை இதுகுறித்து வெளியே சொன்னால் எனது செல்போனில் உனது நிர்வாண படத்தை வைத்துள்ளேன். அதை சமூக வலைதளங்களில் பதிவிடுவேன் என மிரட்டியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அந்த ஆபாச படத்தை காட்டி மிரட்டி மீண்டும் லலிதாவை பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் வீடு திரும்பிய லலிதா தனக்கு நடந்த விவரத்தை யாரிடம் கூறாமல் இருந்தார். இந்த சூழலில் சதீஷ்குமார் மீண்டும் லலிதாவை உல்லாசத்துக்கு அழைத்து தொந்தரவு செய்ததோடு செல்போனில் இருந்த லலிதாவின் படத்தை காட்டி மிரட்டியுள்ளார்.
இதனால் வேறு வழி இல்லாமல் லலிதா கணவரிடம் கூறி அழுதார். இதனால் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதால், அவமானம் தாங்காமல் கணவனும் மனைவியும் தற்கொலைக்கு முயன்றனர். பின்னர் அவர்களது குடும்பத்தினர் 2 பேரையும் மீட்டனர். இதுதொடர்பாக லலிதா மற்றும் அவரது கணவர் லால்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் லால்குடி மகளிர் போலீசார், சதீஷ் ராஜா மீது 417, 341, 366, 376, 509 ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.