களப்பணியில் குடுமியான்மலை வேளாண் கல்லூரி மாணவிகள்;” கோனோ”. கருவி குறித்து விளக்கம்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயல்படும் குடுமியான்மலை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு கிராமப்புற வேளாண்மை பணி அனுபவ திட்டத்தின் கீழ் வேளாண்மை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
அந்த வகையில் தற்போது இறுதி ஆண்டு படிக்கும் மாணவிகள் பெருங்களூரில் தங்கி கிராமப்புற வேளாண்மை பணி அனுபவ திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வருகின்றனர்.
குறிப்பாக நெல், நிலக்கடலை, சவுக்கு, முந்திரி, சம்பங்கி, மாசி பச்சை போன்ற பயிர்களை விவசாயம் செய்வதை பற்றி கற்றறிந்தனர்.
மேலும், கந்தர்வகோட்டைக்கு அருகிலுள்ள வெள்ளாள விடுதியில் கணேஷ் நர்சரிக்கு சென்று பல வகையான மரக்கன்றுகளை பற்றியும் அவைகளை பராமரிக்கும் முறைகளை பற்றியும், ஏற்றுமதி செய்வதை பற்றியும் கற்றறிந்தனர்.
அதேபோல், ஆதனக்கோட்டை அருகே சொக்கநாதப்பட்டி எனும் கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை சேர்ந்த நான்காம் ஆண்டு மாணவி த.சுபாஷினி, விவசாயிகளிடத்தில், நெல் சாகுபடியில் பெரும் இடையூறாக இருக்கும் களைகளை “கோனோ ( Cono weeder ) களையெடுக்கும் கருவி” வாயிலாக அகற்றுவதன் நன்மைகள் மற்றும் அதனை பயன்படுத்தும் முறை குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
இதில் பல விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். மாணவி சுவேதா, நெல் சாகுபடியில் தரமான விதைகளை தேர்ந்தெடுக்க விதை மேம்படுத்தும் நுட்பத்தின் (முட்டை மிதக்கும் நுட்பம்) செயல் விளக்கம் மற்றும் அதன் நன்மைகள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். இதில் விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவிகள் கு.சுபிட்சா, மு.சுஜிதா, மு.ஜீவரேகா, த.சுபாஷினி, ரா.பாரதி, அ.வினிதா, அ.சுவேதா மற்றும் சு.யாஷிகா உள்பட மாணவிகள் கலந்துக்கொண்டனர்.