ஜி-கார்னர் பாலம் சீரமைக்கும் பணி முடிவு. விரைவில் மீண்டும் பயன்பாட்டுக்கு வருகிறது . வாகன ஓட்டிகள் நிம்மதி பெருமூச்சு
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஜி-கார்னர் அருகே மேம்பாலத்தின் கீழ் பகுதி அதிக போக்குவரத்து காரணமாக பழுதடைந்திருப்பது கடந்த ஜன.11ம் தேதி கண்டறியப்பட்ட உடன் அந்த சாலையில் போக்குவரத்தினை மாற்றி அப்பகுதியின் மற்றொரு சாலை இருவழி பாதையாக மாற்றப்பட்டது.
இச்சாலை வழியாக சென்னை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூர், சேலம் போன்ற ஊர்களுக்கும் சென்றுவர ‘முக்கிய சாலை என்பதல் மாவட்ட நிர்வாகம் தனிக்கவனம் எடுத்துக்கொண்டது.
அமைச்சர்கள் கே.என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி, திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் உட்பட தேசிய நெடுங்சாலைத்துறை பொறியாளர்கள், ரயில்வே நிர்வாக உயர் அதிகாரிகள் என அனைவரும் நேரில் பாலத்தை ஆய்வு செய்தனர்.
திருச்சி என்ஐடி பேராசிரியர்கள் மற்றும் சென்னை ஐஐடி பேராசிரியர் குழுவினர் ஆகியோரும் பாலத்தை ஆய்வு செய்தனர். ஐஐடி பேராசிரியர் குழுவினர் வகுத்த திட்டத்தின்படி துரித கதியில் பாலத்தை சீரமைக்கும் பணி கடந்த ஜன.19ம் தேதி பூஜையுடன் துவங்கியது. இதன்படி பாலத்தின் மையப்பகுதியில் நவீன கருவிகளின் உதவியுடன் பக்கவாட்டு சுவர் டிரில் செய்யப்பட்டு 100க்கும் மேற்பட்ட ராட்சச இரும்பு கம்பிகள் (ராடுகள்) செருகப்பட்டு, போல்ட் நெட்டுகள் வாயிலாக முறுக்கப்பட்டன. இந்த சாலை முக்கியம் வாய்ந்த தேசிய நெடுஞ்சாலை என்பதாலும், நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் இந்த பாலத்தை கடந்து செல்வதாலும், தற்போது பணிகள் நிறைவுற்ற நிலையில் பாலத்தின் உறுதித்தன்மையை சோதனை செய்ய ஐஐடி வல்லுனர் குழு முடிவு செய்து நேற்று பாலத்தின் கீழ்பகுதியில் சென்சார்களை ஐஐடி குழுவினர் பொருத்தினர்.
இதையடுத்து இரவு பாலத்தின் பழுதடைந்த பகுதியில் 30 டன் எடை கொண்ட லாரியை நிறுத்தி பாலத்தின் உறுதித்தன்மை சோதனை செய்யப்பட உள்ளது. இவ்வாறு அதிக எடையிலான லாரியை நிறுத்தும்போது சென்சார் ஒரு மில்லி மைக்ரான் மீட்டர் அளவில் கூட அசைவோ, நகர்தலோ இல்லாமல் இருந்தால், பாலம் உறுதியுடன் இருப்பதாக முடிவு செய்யப்பட்டு, போக்குவரத்துக்கு திறந்து விடப்படும். சென்சாரில் மாற்றம் ஏதாவது தெரிய வந்தால் மீண்டும் பாலத்தை சீரமைக்கும் பணி தொடரும் எனக்கூறப்படுகிறது. பாலம் பழுது காரணமாக சாலையில் செய்யப்பட்டிருக்கும் போக்குரத்து மாற்றத்தால் இப்பகுதியில் தற்போது வரை வாகனங்கள் செல்வதில் வாகன ஓட்டிகள் பெரும் சிக்கலை சந்தித்து வருகின்றனர்.
இதனால் இப்பகுதியில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவதற்காக 20க்கும் மேற்பட்ட போலீசார் இரவும், பகலும் ‘ஷிப்ட்’ முறையில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் சோதனை வெற்றி பெற்றால் வாகன ஓட்டிகள் மட்டுமல்லாது போலீசாரின் பிரச்னையும் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.