திருநாவுக்கரசருக்கு எதிராக ஒன்று திரண்ட காங்கிரஸ் நிர்வாகிகள். ராகுல் காந்தியை நேரில் சந்திக்க முடிவு .
திருச்சி காங்கிரஸ் எம்பியாக இருக்கும் திருநாவுக்கரசர் தொகுதியை மீண்டும் தனக்கே பெற வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்.
ஆனால், திருச்சி முன்னாள் எம்பியான மறைந்த அடைக்கலராஜின் மகன் ஜோசப் லூயிஸும் திருச்சியில் போட்டியிட முயற்சித்து வருகிறார்.
இதை அறிந்த திருநாவுக்கரசர் அடைக்கலராஜ் மகன் ஜோசப் லூயிஸ் ஆதரவாளர்கள் பலரையும் மாவட்ட காங்கிரசில் அவர்கள் வகித்து வந்த பதவிகளில் இருந்து நீக்கி வருகிறார்.
மாவட்ட தலைவர் ஜவஹர், கோட்ட தலைவர்கள் சிவாஜி சண்முகம், உறையூர் ராஜ் மோகன், மலைக்கோட்டை ரவி, பாலக்கரை ஜெரால்டு, பொன்மலை செல்வகுமார் என வரிசையாக ஜோசப் லூயிஸின் ஆதரவாளர்கள் திருநாவுக்கரசரால் நீக்கப்பட்டனர்.
இந்நிலையில் திருநாவுக்கரசருக்கு எதிராகத் திரண்டுள்ள லூயிஸ் அடைக்கலராஜின் ஆதரவாளர்கள் அண்ணா சிலை விக்டர் உள்ளிட்ட நபர்களால் காமராஜ் பேரவை என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
வெள்ளிக்கிழமை அன்று காமராஜர் பேரவை சார்பில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. அதில் திருநாவுக்கரசரால் நீக்கப்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு அவர்கள் காங்கிரசில் வகித்த பதவிகள் வழங்கப்பட்டு, அவர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். அதாவது மீண்டும் திருச்சி காங்கிரஸ் ஜோசப் லூயிஸ் வசம் வந்தால் இவர்கள் அனைவரும் அப்படியே காங்கிரஸ் நிர்வாகிகள் ஆவார்கள் என்பதுதான் இதற்கு அர்த்தம்.
இன்னும் சில நாட்களில் திருநாவுக்கரசருக்கு எதிராக திருச்சி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டி, ‘மக்களவைத் தேர்தலில் ஜோசப்லூயிஸ் அடைக்கலராஜுக்கு சீட் வழங்க வேண்டும்’ என தீர்மானம் நிறைவேற்றி அதை ராகுல் காந்தியிடம் கொடுக்க தயாராகி வருகிறார்கள்.