சூரரைப் போற்று படத்தில் இடம்பெற்றுள்ள ஆகாசம் பாடலின் விடியோ வெளியாகியுள்ளது.
இறுதிச்சுற்று சுதா கொங்கராவின் அடுத்த படமான சூரரைப் போற்று படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் சூர்யா. இது அவருடைய 38-வது படம்.
கதாநாயகியாக மலையாள நடிகை அபர்ணா முரளி நடித்துள்ளார். எட்டு தோட்டாக்கள், சர்வம் தாளமயம் ஆகிய தமிழ்ப்படங்களில் இவர் நடித்துள்ளார். இப்படத்துக்கு இசை – ஜி.வி. பிரகாஷ். ஒளிப்பதிவு – நிகேத் பொம்மிரெட்டி.
சூரரைப் போற்று படம், அக்டோபர் 30-ல் அமேசான் பிரைமில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சூரரைப் போற்று வியாபாரம் மூலம் கிடைத்த தொகையிலிருந்து ரூ. 5 கோடியை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் முன்களப் பணியாளர்களுக்கும் வழங்குவதாக சூர்யா அறிவித்துள்ளார். அமேசான் பிரைம் மூலமாக 200 நாடுகளில் சூரரைப் போற்று படம் வெளியாகும் என 2டி நிறுவனத்தின் இயக்குநர் ராஜசேகர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சூரரைப் போற்று படம் திட்டமிட்டபடி அக்டோபர் 30 அன்று வெளியாவதில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சூரரைப் போற்று படம் விமானம் தொடர்பான கதை என்பதால் இந்திய விமானத்துறையிடமிருந்து அனுமதி வாங்கிய பிறகுதான் படத்தை ஓடிடியில் வெளியிடமுடியும். இதனால் படத்தின் வெளியீட்டில் தாமதம் ஏற்படுவதாக சூர்யா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஆகாசம் பாடலின் விடியோ இடம்பெற்றுள்ளது. இதில் மாறாவின் வெற்றிப்பயணம் காட்சிகளாக இடம்பெற்றுள்ளன.