உலக கோப்பை கிரிக்கெட் தொடர்: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா. ஆஸ்திரேலியாவின் 24 ஆண்டுகால சாதனை தகர்ப்பு
50 ஓவர் உலகக் கோப்பை போட்டி கடந்த 5ம் தேதி தொடங்கியது.இந்தத் தொடரின் ஐந்தாவது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் சென்னையில் மோதின.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே பும்ராவின் அபார பந்தில் மிட்சல் மார்ஸ் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதன் பின்னர் வார்னர் மற்றும் ஸ்மித் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினர்.வார்னர் 41 ரன்களிலும்,
ஸ்மித் 46 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதன் பிறகு வந்தவர்கள் அடுத்தடுத்த ஆட்டம் இழந்தனர். ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் சிறப்பாக பந்துவீசி ஆஸ்திரேலியா அணியின் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினர். இறுதிக்கட்டத்தில் ஸ்டார்க் 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.49.3 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 199 ரன்களை எடுத்தது.இந்தியா அணி தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்களையும் குல்திப் யாதவ், பும்ரா தலா 2 விக்கெட்களையும், அஸ்வின் 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.
200 என்ற இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. இசான் கிசன்,ரோகித் சர்மா,ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் அடுத்தடுத்து டக் அவுட் ஆகி வெளியேறினார். 2 ரன்னில் 3 விக்கெட்களை இழந்த நிலையில்
விராட் கோலி மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். கோலி 12 ரன்களில் இருக்கும்போது கொடுத்த எளிய கேட்ச்சை மிட்சல் மார்ஸ் தவறவிட்டார். இதன் பிறகு இந்த ஜோடி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது. சிறப்பாக ஆடிய இருவரும் அரை சதம் அடித்தனர். சிறப்பாக ஆடிய கோலி 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
சிறப்பாக ஆடிய கே.எல் ராகுல் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 97 ரன் எடுத்தார்.41.2 ஓவர் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்களை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியின் ஆட்ட நாயகனாக கே.எல். ராகுல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1999ம் ஆண்டு உலக கோப்பை தொடர் முதல் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி விளையாடிய தனது முதல் போட்டியில் வெற்றி பெற்று வந்த சாதனையை இந்திய அணி 24 ஆண்டுகளுக்கு பின் முற்று புள்ளி வைத்து உள்ளது.