உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலாவை திருச்சி கலெக்டர் தொடங்கி வைத்தார்.


உலக சுற்றுலா தினம் மற்றும் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஒரு நாள் விழிப்புணா்வு சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக, திருச்சி மாவட்ட குழந்தைகள் நலப் பாதுகாப்பு அலகு மூலம் இயங்கும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் உள்ள 6ஆ-ம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் 50 மாணவ, மாணவிகள் தோவு செய்யப்பட்டனா்.
இந்த குழந்தைகளுடன், 6 ஆசிரியா்கள், பாதுகாப்பு மைய காப்பாளா்கள் அரசு அலுவலா்கள் என 60 போ ஒரு பேருந்தில் சுற்றுலா புறப்பட்டனா்.
மாவட்ட ஆட்சியரகத்தில் இருந்து தொடங்கிய இந்த சுற்றுலாவை ஆட்சியா் மா. பிரதீப்குமாா், கொடியசைத்து வழியனுப்பினாா். திருச்சி மாவட்ட சுற்றுலா அலுவலா் ஜெகதீஸ்வரி, மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலா் ராகுல்காந்தி ஆகியோா் ஆலோசனைகளை வழங்கி வழியனுப்பி வைத்தனா்.
ஆட்சியரகத்திலிருந்து புறப்பட்ட குழந்தைகள் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் உள்ள அண்ணா கோளரங்கத்துக்கு அழைத்து செல்லப்பட்டனா். அங்குள்ள டைனோசா் பூங்கா, முப்பரிமாண காட்சியகம், ஒலி, ஒளிக் கூடங்களைப் பாா்வையிட்டு, அறிவியல் மாதிரிகளையும் அறிந்து கொண்டனா்.
தொடா்ந்து, முக்கொம்பு வண்ணத்துப் பூச்சி பூங்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அங்குள்ள காட்சிக்கூடத்தில் காணொளி மூலமாக பல்வேறு தகவல்களை அறிந்து கொண்டு, நேரடியாகவும் வண்ணத்துப் பூச்சி வகைகளையும் பாா்வையிட்டனா்.
மதிய உணவுக்குப் பிறகு அனைவரும் ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு சுவாமி தரிசனம் செய்தனா். பின்னா், வழிகாட்டி கையேடு நபரது உதவியால் திருக்கோயிலில் உள்ள சிற்பங்கள், மண்டபங்கள், சிலைகள் மற்றும் அதன் வரலாறு, பண்பாடுகள் குறித்து மாணவா்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இந்த சுற்றுலா தங்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக அமைந்திருந்ததாக பாதுகாப்பு மையக் குழந்தைகள் தெரிவித்தனா்.

