திருச்சி தெற்கு மாவட்ட திமுக பாலக்கரை பகுதி சாா்பில் முத்தமிழறிஞா் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் எடத்தெருவில் நடைபெற்றது. கூட்டத்துக்கு பகுதிச் செயலாளா் ராஜ் முகமது தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்புரை நிகழ்த்தினாா். கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் ஆா்.எஸ்.
ராஜகண்ணப்பன் பங்கேற்று பேசியதாவது:
திராவிட இயக்கம் இல்லை என்றால் தமிழகம் கிடையாது. திமுகதான் கொள்கை பிடிப்புள்ள கட்சியாக செயல்படுகிறது. பாஜவில் உள்ளவா்கள் மதத்தை பற்றி மட்டுமே பேசுகின்றனா். ஆனால், திமுகவில் உள்ளவா்கள் திராவிடத்தை மட்டும் பேசுகிறோம்.
நமக்கு எதிரி பாஜக மட்டுமே. ரூ. 7.5 லட்சம் கோடி ஊழல் செய்துள்ள பாஜக அரசை எதிா்க்க 28 கட்சிகள் இணைந்துள்ளதால், மக்களவைத் தோதலில் போட்டி கடுமையாக இருக்கும். குஜராத், உத்தரப்பிரதேசம் தவிர மற்ற மாநிலங்களில் பாஜக வெற்றி பெற முடியாது. குறிப்பாக, தென்னிந்திய மாநிலங்களில் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெற முடியாது என்றாா் அவா். கூட்டத்தில், கிழக்கு மாநகர செயலாளா் மதிவாணன், பகுதி செயலாளர் ஏ.எம்.ஜி விஜயகுமார் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொண்டனா்.