உலக தாய்ப்பால் வாரத்தையொட்டி, திருச்சி அரசு மருத்துவமனை குழந்தைகள் நலப்பிரிவு, தாய்-சேய் நலப்பிரிவு, இந்திய மருத்துவக் கழகம் உள்ளிட்டவை இணைந்து நடத்திய தாய்ப்பால் விழிப்புணா்வு பேரணி திருச்சியில் நடைபெற்றது.
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் தொடங்கிய பேரணியை மருத்துவமனை முதன்மையா் டி. நேரு கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். இதில் தாய்ப்பால் குறித்த விழிப்புணா்வு பதாகைகளுடன் திரளான மருத்துவ மாணவா்கள், செவிலியா்கள், தன்னாா்வலா்கள் பங்கேற்று பேரணியாகச் சென்றனா். பேரணியானது நீதிமன்ற வளாகம் அருகே அமைந்துள்ள எம்ஜிஆா் சிலை வரை சென்று அங்கிருந்து மீண்டும் மருத்துவமனை வளாகத்தில் நிறைவடைந்தது.
முன்னதாக, மருத்துவமனை வளாகத்தில் மருத்துவா்கள், செவிலியா்கள், பொதுமக்கள் என திரளானோா் பங்கேற்று, குழந்தைகளுக்கு கட்டாயம் தாய்ப்பால் கொடுப்போம் என்று உறுதிமொழி ஏற்றனா். தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவத்தை முதன்மையா் நேரு எடுத்துக் கூறினாா். நிகழ்வில், அரசு மருத்துவக் கல்லூரி துணை முதல்வா் ஆசியா பேகம், மருத்துவ கண்காணிப்பாளா் அருண்ராஜ், குழந்தைகள் நல மருத்துவா் செந்தில்குமாா், செவிலியா்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.