திருச்சியில், போலீஸ் எஸ்.ஐ., ஓட்டிச் சென்ற பைக் மோதி கூலித் தொழிலாளி பலி.
திருச்சி, கருமண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி கருப்பசாமி (வயது61). நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் கருமண்டபம் போலீஸ் செக் போஸ்ட் அருகே, சாலையை கடக்க முயன்றார்.
அப்போது அவர் மீது அவ்வழியே வந்த பைக் மோதியதில் படுகாயம் அடைந்த கருப்பசாமி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதையறிந்த கருப்பசாமியின் உறவினர்கள், விபத்தை ஏற்படுத்திய எஸ்.ஐ.,யை கைது செய்ய வலியுறுத்தி அப்பகுதியில் மறியலில் ஈடுபட்டனர்.
திருச்சி மாநகர தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், எஸ்.ஐ., நடராஜன் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். சிறப்பு எஸ்.ஐ.,யான நடராஜன், தற்போது, திருச்சி டி.ஐ.ஜி., அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.