இந்தியாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை ஆக்கி தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று உள்ளது.
ஸ்பெயின் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியா வீழ்த்தியுள்ளது. அமித் ரோஹிதாஸ் மற்றும் ஹர்திக் பதிவு செய்த கோல்கள் அணிக்கு வெற்றியை பெற்றுத் தந்தது.
குரூப்-டி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, ஸ்பெயின் உடன் பலப்பரீட்சை மேற்கொண்டது.
இந்த போட்டி ரூர்கேலாவில் உள்ள பிர்சா முண்டா சர்வதேச ஹாக்கி மைதானத்தில் நடைபெற்றது. இந்திய அணிக்கு உள்நாட்டு ரசிகர்களின் ஆதரவு மைதானத்தில் இருந்தது.
ஆட்டத்தின் முதல் 15 நிமிடங்களுக்குள் முதல் கோலை பதிவு செய்தது இந்தியா. அடுத்த 15 நிமிடங்களுக்குள் மீண்டும் ஒரு கோலை பதிவு செய்து 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. அமித் முதல் கோலை பதிவு செய்தார். ஹர்திக் சிங் இரண்டாவது கோலை பதிவு செய்தார்.
60 நிமிடங்கள் முடிவின் போது இந்தியா 2-0 என முன்னிலை பெற்று ஆட்டத்தில் வென்றது.
இந்திய அணியை போலவே அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தங்கள் முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. குரூப்-டி பிரிவில் கோல்கள் அடிப்படையில் இங்கிலாந்து முதல் இடத்தில் உள்ளது. இந்தியா இப்போது இரண்டாவது இடத்தில் உள்ளது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பதிவு செய்துள்ளன. இந்திய அணி வரும் 15-ம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாட உள்ளது.