திருச்சியில் ஜனவரி 8 ஆம் நாள் வள்ளலார் முப்பெரும் விழா நடைபெறவுள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை திருச்சி இணை ஆணையர் சீ.செல்வராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வள்ளல் பெருமான் 200 ஆவது அவதார ஆண்டையொட்டி (அக்டோபர் 2022 முதல் 2023 வரை) இடைபட்ட 52 வார நாள்களில், தமிழகத்தின் முக்கிய நகரங்களில் முப்பெரும் விழா எடுக்கப்படும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி திருச்சி மாவட்டத்தில் முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 8 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள கலையரங்க மஹாலில் நடைபெறும் இவ்விழாவில், வள்ளல் பெருமான் தவச்சாலை தொடங்கிய 156 ஆவது ஆண்டு விழா, அவர் அவதரித்த 200 ஆவது ஆண்டு தொடக்க விழா, ஜோதி தரிசனம் காட்டுவித்த 152 ஆவது ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் கொண்டாடப்படவுள்ளன.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் மற்றும் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் சன்மார்க்க சங்க பிரநிதிகள், பங்கேற்கின்றனர்.
காலை 6 மணிக்கு தொடங்கி மாலை வரை நடைபெறும் இவ்விழாவில் முதல் நிகழ்ச்சியாக அருட்பெரும் ஜோதி அகல் விளக்கு ஏற்றுதலுடன் நிகழ்ச்சிகள் தொடங்கி மகா மந்திரம் ஓதுதல், திரு அருட்பா அகவல் பாராயணம் உள்ளிட்டவைகளைத் தொடர்ந்து சன்மார்க்க கொடியேற்ற நிகழ்வு நடைபெறுகின்றது.
அதனைத் தொடர்ந்து கும்மி மற்றும் கோலாட்டங்களுடன் பேரணி நடைபெறும்.
பேரணி மண்டபத்தில் தொடங்கி, ஸ்டேட் வங்கி, தலைமை அஞ்சலகம், ஒத்தக்கடை, மத்திய சுங்க மற்றும் கலால் அலுவலகம், மத்திய பேருந்து நிலையம் வழியாக மீண்டும் மண்டபத்தை அடைகிறது.
நிகழ்வில் கலை நிகழ்ச்சிகளும், சன்மார்க்க சான்றோர்கள் மற்றும் பல்வேறு வகையான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகளும் நடைபெறும்.