Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அமைச்சரிடம் 200 கோடி 500 கோடி என பெற்று எங்களை வளப்படுத்துங்கள். திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் 43வது வார்டு திமுக கவுன்சிலர் செந்தில்

0

திருச்சி
மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் இன்று கூட்ட அரங்கில் நடைபெற்றது. மேயர் மு. அன்பழகன் தலைமை தாங்கினார். ஆணையர் வைத்திநாதன் முன்னிலை வகித்தார். இதில் மண்டல குழு தலைவர்கள் மதிவாணன், துர்கா தேவி,விஜயலட்சுமி கண்ணன், மற்றும் அரசு அதிகாரிகள் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில்
கவுன்சிலர் கவிதா செல்வம் பேசும்போது,
மாநகராட்சியில் தெரு நாய்கள் கருத்தடை மையங்கள் போன்று உடல்நலம் குன்றிய நாய்களை பராமரிக்க பாதுகாப்பு மையம் தொடங்க வேண்டும்.

அதிமுக கவுன்சிலர்கள்
வெளி நடப்பு

அதிமுக மாமன்ற தலைவர் கோ.கு.அம்பிகாபதி;-

தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை இழிவாக பேசியிருக்கின்றார். கருவறை முதல் கல்லறை வரை திட்டங்களை தந்த முதல்வரை இழிவாக பேசிய மேயரை ‘கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம் என்றார் மேலும் ஜெயலலிதாவின் சாதனைகளை அவர் பட்டியலிட்ட போது அதற்கு திமுக கவுன்சிலர் முத்துச்செல்வம், இந்திய கம்யூனிஸ்ட் கவுன்சிலர் சுரேஷ், ராமதாஸ் உள்ளிட்டவர்கள் எழுந்துநின்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அம்பிகாபதி மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் அரவிந்தன், அனுசுயா ஆகியோர் வெளிநடப்பு செய்தனர். பின்னர் அரவிந்தன் கூறும் போது, திருச்சி மாநகராட்சியில் எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இந்த ஜனநாயக படுகொலையை வன்மையாக கண்டிக்கிறோம் என கூறினார்.

ஜவகர் (காங்கிரஸ்):

ஸ்ரீரங்கம் பஸ் நிலைய பணிகளை விரைவு படுத்த வேண்டும். சொர்க்கவாசல் திறப்பு விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் பகுதியில் தூய்மை பணிகளை விரிவுபடுத்த கூடுதல் தூய்மை பணியாளர்களை நியமிக்க வேண்டும். ஏற்கனவே மாநகராட்சி சார்பில் யாத்ரிநிவாசுக்கு ஆறு ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. அந்த நிலத்துக்கு மாற்று இடம் வழக்கு விவகாரம் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. அதை விரைவுபடுத்த வேண்டும்.

சுபா (திமுக):-

தூய்மைப் பணியாளர்கள் குழுவாக சேர்ந்து கொண்டு வேலை செய்யாமல் ஏமாற்றி வருகிறார்கள். ஏற்கனவே போராட்டம் நடத்திய போது அவர்களை வேறு வார்டுக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தேன். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த 13 நாட்களாக பாதாள சாக்கடை பணிகள் எதுவும் நடைபெறவில்லை.

மேயர் அன்பழகன் :-

இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும். வேலை செய்யாத தூய்மை பணியாளர்கள் நீக்கப்படுவார்கள்.

மேயர் அன்பழகன்:-

திருச்சி மாநகராட்சியில் நாம் பொறுப்பேற்ற போது 225 கிலோமீட்டர் தூரத்துக்கு மட்டுமே பாதாள சாக்கடை பணிகள் நிறைவேற்றப்பட்டிருந்தன. நாம் வந்த பின்னர் தற்போது அது 600 கிலோ மீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது.
நமது பணிகளின் வேகத்தை பார்த்து மத்திய அரசு மூலம் தற்போது 22 கோடி நிதி திருச்சி மாநகராட்சிக்கு ஆணையரின் முயற்சியால் கிடைத்துள்ளது.
கடந்த ஆட்சியில் பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட பகுதிகளில் சாலை அமைப்பதற்கு நிதி ஒதுக்காமல் சென்று விட்டார்கள். வருகிற மார்ச் அல்லது ஜூன் மாதத்திற்குள் அனைத்து பகுதிகளிலும் பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட இடங்களில் சாலைகள் அமைக்கப்படும்.

கலைச்செல்வி கருப்பையா(திமுக):-

எனது வார்டுக்கு உட்பட்ட பீம நகர் கிருஷ்ணன் கோவில் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான ஆறு கடைகள் உள்ளன. இது கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மிகக் குறைந்த வாடகையில் விடப்பட்டது. தற்போது இந்த கடைகள் உள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது.

மேயர் அன்பழகன்:-

உள் வாடகைக்கு விடப்பட்டிருந்தால் ஆய்வு நடத்தப்பட்டு அந்த கடைகள் மீண்டும் மாநகராட்சி ஏலம் விடப்படும். மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதை பொறுக்க முடியாது.

சுரேஷ்குமார் (கம்யூ.):-

தூய்மை பணியாளர்கள் சங்கம் அமைத்து உரிமைகளுக்காக போராடுவதற்கு உரிமை இருக்கிறது. வேலை நேரத்தை தவிர்த்து தான் போராட்டம் நடத்துகிறார்கள்.

மேயர் அன்பழகன் :-

பிரச்சனை இருந்தால் முதலில் என்னிடமோ அல்லது ஆணையாளரிடமோ தகவல் தெரிவித்து விட்டு அதன் பின்னர் நீங்கள் போராட்டம் நடத்துங்கள்.

கவுன்சிலர் ரெக்ஸ் (காங்கிரஸ்):-

வார்டு வாரியாக மாமன்ற உறுப்பினர்களுக்கு அலுவலகம் கட்ட வேண்டும். கவுன்சிலர்களின் வார்டு அத்தியாவசிய பணிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியை ரூபாய் ஒரு லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்த வேண்டும்.

மேயர் அன்பழகன்:-

பாதாள சாக்கடை மற்றும் சாலை பணிகள் நிறைவுற்ற பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும்.

பைஸ் அகமது
(மனிதநேய மக்கள் கட்சி) :-
திருச்சி தென்னூர் அண்ணா நகர் உக்கிர காளியம்மன்கோவில் பகுதியில் இருந்து இந்து மிஷன் ஆஸ்பத்திரி வரை சென்டர் மீடியனை அழகு படுத்தும் பணியை நீட்டிக்க வேண்டும்.

பிரபாகரன் (வி.சி.க,)–

திருச்சியில் நேற்று நடைபெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நிகழ்ச்சிக்கு கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்காதது சிறிது வருத்தம் அளிக்கிறது. முதல்வர் வருகை தந்த பகுதிகளில் சாலை பணிகள், சாக்கடை பணிகள் முழுவீச்சில் நடந்தன. அதே போன்று மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் பணிகள் நடைபெற்றால் சிறந்த மாநகராட்சியாக மாறும் என்பதை இந்த அவையில் நான் தெரிவித்துக் கொள்கிறேன். இரட்டை வாய்க்கால் பிரச்சனையை 10 மாதமாக பேசிக் கொண்டிருக்கிறேன். அதற்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும்.

கவிஞர் செந்தில் (திமுக):-

மாநகர தந்தையாக இருக்கும் மேயர் அவர்கள் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சரின் நிழலாக இருக்கிறீர்கள். ஆணையரைப் போன்று தாங்களும் அவ்வப்போது அமைச்சரை சந்தித்து மாநகராட்சிக்கு தேவையான நிதியினை 100 கோடி 200 கோடி 500 கோடி என்று பெற்று எங்களை வளப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .
இவ்வாறு விவாதம் நடந்தது.

Leave A Reply

Your email address will not be published.