நெடுஞ்சாலை துறையை கண்டித்து திருச்சி 47வது வார்டு அமமுக கவுன்சிலர் செந்தில்நாதன் தலைமையில் பொதுமக்கள் மீண்டும் சாலை மறியல்.
திருச்சியில் உடைக்கப்பட்ட குடிநீர் குழாயை சரி செய்து கொடுக்காத நெடுஞ்சாலை துறையை கண்டித்து கவுன்சிலர் செந்தில்நாதன் தலைமையில் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்.
திருச்சி மாநகராட்சி 47வது வார்டுக்கு உட்பட்ட சுப்ரமணியபுரம் பகுதிகளில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணியின் போது சுப்பிரமணியபுரம் பகுதிக்கு செல்லும் பிரதான குடிநீர் குழாயை நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் உடைத்துவிட்டனர். இதனால் கடந்த 5 தினங்களுக்கு மேலாக சுப்ரமணியபுரம் பகுதிக்கு மாநகராட்சி குடிநீர் வரவில்லை.
இதுகுறித்து பொதுமக்கள் தரப்பிலும், அமமுக கவுன்சிலர் செந்தில்நாதன் தரப்பிலும் புகார் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் உடைக்கப்பட்ட குடிநீர் குழாயை சரி செய்ய நெடுஞ்சாலைத்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதனால் கடந்த 5 தினங்களாக குடிநீரின்றி அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர்.
சுப்பிரமணியபுரம் பகுதி மக்கள் குடிநீருகாக காலி குடங்களுடன் அலையும் நிலை உள்ளது.
இந்நிலையில் குடிநீர் குழாயை சரி செய்ய நடவடிக்கை எடுக்காத நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து இன்று கவுன்சிலர் செந்தில்நாதன் தலைமையில் திருச்சி- புதுக்கோட்டை சாலையில் சுப்பிரமணியபுரம் மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்ட எஸ்பி அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த
கே.கே. நகர் போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட கவுன்சிலர் செந்தில்நாதன் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
குடிநீர் குழாயை சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அலுவலர்கள் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முன்னதாக சில தினங்களுக்கு முன்பு இதேபோல் 47வது வார்டில் குடிநீர் குழாயை நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரர் உடைத்து விட்டனர்.
அப்போதும் கவுன்சிலர் செந்தில்நாதன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நெடுஞ்சாலை துறையினர் உடைத்த குழாயை ஒப்பந்ததாரர் சரி செய்து கொடுப்பார் என்று பேசி முடிக்கப்பட்டது. இதனால் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
ஆனால் தற்போது சுப்ரமணியபுரம் பகுதியில் உடைக்கப்பட்ட குடிநீர் குழாயை சரி செய்து கொடுக்காமல் நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரர் தரக்குறைவாக பொதுமக்களை பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மறியல் போராட்டம் மற்றும் பிரச்சனை காரணமாக கவுன்சிலர் செந்தில்நாதன் இன்று நடந்த மாநகராட்சி மாமன்ற கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை என கூறினார்.