Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் ஆமை வேகத்தில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெறுவதால் ரூ.50 லட்சம் வீண்.முன்னாள் துணை மேயர் சீனிவாசன் குற்றச்சாட்டு.

0

திருச்சியில் பாதாள சாக்கடை பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால், தீ விபத்தில் ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான மக்கள் வரிப்பணம் வீணானது என அதிமுக முன்னாள் துணை மேயர் சீனிவாசன் குற்றச்சாட்டு.

திருச்சியில் மாநகராட்சி சார்பில், மாநகரின் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது.

எஸ்.வி.டி இன்ஃப்ரா எனும் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் இப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, திருச்சி சங்கிலியாண்டபுரம், துரைசாமிபுரம் ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடை அமைப்பதற்காக சிறிய மற்றும் பெரிய அளவிலான பிளாஸ்டிக் பைப்புகள் துரைசாமிபுரம் சர்வேட் பள்ளி எதிரே உள்ள காலி மனையில் இறக்கி வைக்கப்பட்டிருந்தன.

சுமார் ஒரு கோடி மதிப்பிலான, 5000க்கும் மேற்பட்ட பைப்புகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று (22.12.22) மதியம் பைப்புகள் வைக்கப்பட்டு இருந்த பகுதியில் இருந்து, திடீரென தீ பரவி, கொழுந்து விட்டு எரியத் துவங்கியது.

அதிக வெப்பத்துடன் எரிந்த தீ காரணமாக, அங்கிருந்த ரூபாய் 50 லட்சத்திற்கும் மேலான மதிப்புடைய பாதாள சாக்கடை பைப்புகள் எரிந்து நாசமாயின.

திருச்சி கன்டோன்மென்ட் தீயணைப்பு துறையினர் 20 க்கும் மேற்பட்டோர் இரண்டு வாகனங்களில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தீ விபத்து குறித்து அறிந்த, திருச்சி அதிமுக முன்னாள் மேயர் சீனிவாசன் உள்ளிட்ட அதிமுகவினர், அப்பகுதிக்கு வந்து தீ அணைக்கும் பணியினை அதிகாரிகளை தொடர்பு கொண்டு முடுக்கி விட்டனர்.

இது குறித்து பேசிய அதிமுக முன்னாள் துணை மேயர் சீனிவாசன்…

அம்மா அவர்கள் ஆட்சி காலத்திலும், இடைக்கால பொதுச்செயலாளர் ஆட்சி காலத்திலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திருச்சி மாநகராட்சிக்கு சுமார் ஆயிரம் கோடி ரூபாய் நிதியை பெற்று தந்தார்கள்.

அந்த நிதியில் திருச்சி மாநகராட்சியில் பாதாள சாக்கடை பணிகளும், திருச்சி மாநகரத்தின் சாலை பணிகளும் நடந்து வருகின்றன. அதிமுக ஆட்சி காலத்தில் சிறப்பாக நடந்து வந்த இந்த பணிகள். தற்பொழுது திமுக ஆட்சி காலத்தில் ஆமை வேகத்தில், நிர்வாக திறனற்ற திமுக ஆட்சியினால் மெதுவாக நடந்து வருகிறது.

இந்த சூழ்நிலையில், திருச்சி மாநகராட்சி என்பது, இந்தியாவிலேயே கடந்த பத்தாண்டு காலம் அம்மா ஆட்சி காலத்திலும் சரி, கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி ஆட்சி காலத்திலும் சரி, மூன்றாம் இடம், ஐந்தாம் இடம், ஏழாம் இடம் போன்ற பத்து இடங்களுக்குள், இந்தியாவிலேயே சிறந்த மாநகராட்சியாக இருந்தது.

தற்பொழுது நிர்வாகத் திறனற்ற திமுக ஆட்சி காலத்தில், சிறந்த மாநகராட்சி பட்டியலில், 500 க்கும் மேல் என்ற அதல பாதாளத்தில் உள்ளது.

தற்பொழுது இன்று (நேற்று) நடைபெற்ற இந்த தீ விபத்து என்பது, பாதாள சாக்கடை திட்டம் விரைவாக நடந்திருந்தால், சங்கிலியாண்டபுரம் பகுதியில் சுமார் 50 லட்சம் மதிப்புள்ள, பாதாள சாக்கடை பணிகளுக்கான பைப்புகள் எரிந்து சாம்பலாகி இருக்காது.

தீ விபத்தினால் சாம்பல் ஆகி உள்ள பொருட்களால், மக்கள் வரிப்பணம் வீணானதற்கு, காலதாமதமான பணிகளே, இந்த பணி மிகவும் மெதுவாக நடந்து வருகிறது.

இது போன்ற விபத்துக்கள், நடைபெறாமல் இருக்க, சாலை பணிகள், பாதாள சாக்கடை பணிகளை விரைவாக முடித்து மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என திருச்சி மாநகர அதிமுக சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

இந்த தீ விபத்து குறித்து, பாலக்கரை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.