பொன்மலையில் திமுக சிறுபான்மை நலபிரிவின் சார்பில் கிறிஸ்மஸ் விழா:அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு.
பொன்மலையில் திருச்சி தெற்கு மாவட்ட திமுக சிறுபான்மை நல பிரிவின் சார்பில் கிறிஸ்மஸ் விழா:அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு.
திருச்சி தெற்கு மாவட்ட சிறுபான்மை நல உரிமைப் பிரிவின் சார்பில், பொன்மலையில் உள்ள புனித சூசையப்பர் பவளவிழா அரங்கில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இந்த விழாவில், கிறிஸ்துமஸ் கேக் வெட்டி, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது:-
ஒரு கல்வி அமைச்சராக இயேசு கிறுஸ்துவின் கல்வி சிந்தனைகள் என்னை மிகவும் கவர்ந்தவை. ஒரு மாணவனுக்கு சரியான நேரத்தில் சரியான செயலை கற்றுக்கொடுக்கும் இடம் பள்ளிக்கூடம். நன்னடத்தை, நேரம் தவறாமை, நேர்மை, மனவலிமை, துணிச்சல் ஆகிய நற்பண்புகளை கற்றுக்கொடுக்கும் இடமாக பள்ளிக்கூடம் திகழ்கிறது என்று இயேசுநாதர் தனது சீடர்களிடத்தில் கற்றலின் நன்மைகளை பற்றி எடுத்துரைத்துள்ளார். அத்தகைய நற்பண்புகளை கற்றுத்தரும் இடமாகவே தமிழக அரசுப் பள்ளிகள் முன்மாதிரியா விளங்குகின்றன. அதற்கேற்ப கல்வித்துறைக்குதான் நிதிநிலை அறிக்கையில் கூடுதல் நிதி ஆண்டுதோறும் ஒதுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஏழை, எளிய மக்களின் கல்வி மேம்பாட்டுக்காகவே பல்வேறு சிறப்புத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம்.
1989-ஆம் ஆண்டு சிறுபான்மையினர் நல ஆணையத்தை அமைத்தவர் மறைந்த முதல்வர் கருணாநிதி. அவரது வழியில் ஆட்சி நடத்தி வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கரூர், மதுரை, தேனி ஆகிய மூன்று மாவட்டங்களில் ஒரு கிறிஸ்தவ உதவி சங்கம் கூடுதலாக தொடங்கிட நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
ஜெருசலேமுக்கு புனித பயணம் செல்வதற்கு வழங்கப்படும் மானியம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சிறுபான்மையினர் மக்களின் நலன் காக்கும் அரசாக திமுக அரசு திகழ்ந்து வருகிறது.
இரண்டு நாட்களுக்கு முன்னதாக நடைபெற்ற நல்லெண்ண விழாவில், கிறிஸ்துமத் விழா என்பது ஒரு மதத்தினரின் விழா அல்ல. சமுதாய விழா என்றார் முதல்வர். அவரது கூற்றுப்படியே தமிழகத்தில் அனைவரும் இணைந்து கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடுகிறோம். இத் திருநாளில் தமிழகமெங்கும் சகோதரத்துவம் பெருகட்டும். அன்பும், மகிழ்ச்சியும் நிலைத்திருக்கட்டும் .இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.
இவ்விழாவில் பொன்மலை மறைமாவட்ட அதிபர் ஏ. சகாயஜெயகுமார், பங்குத்தந்தை பால்ஜெயகுமார், உதவி பங்குத்தந்தை சகாயராஜ் ஆகியோர் கிறிஸ்துமஸ் செய்திகளை வழங்கினர்.
இந்த விழாவுக்கு, சிறுபான்மை பிரிவு மாவட்ட அமைப்பாளர் பி. அருள் சுந்தரராஜன் தலைமை வகித்தார். துணை அமைப்பாளர்கள் அலியார் யூசுப், சபியுல்லா, சேட்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பகுதிச் செயலாளர் கொட்டப்பட்டு தர்மராஜ் வரவேற்றுப் பேசினார். மண்டலத் தலைவர் மு. மதிவாணன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் கே.என். சேகரன், வண்ணை அரங்கநாதன் மற்றும் பொன்மலை பகுதி நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில், ஏராளமானோருக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. மாவட்ட துணை அமைப்பாளர் பிரவீன் பால்ராஜ் நன்றி கூறினார்.