திருச்சியில் ஆடைகளின்றி திரிந்த வாலிபரை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு.
திருச்சியில் மனநலமற்ற நிலையில் ஆடைகளின்றி கிடந்த இளைஞரை போலீஸார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
திருச்சி மத்தியபேருந்து நிலையப் பகுதியில் உள்ள ரவுண்டானாவில், புதன்கிழமை காலை சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் ஆடைகளின்றி நிர்வாண நிலையில் அமர்ந்திருந்தார். அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அவரிடம் விசாரித்தபோது தான் அவர் மன நலமற்றவர் என தெரியவந்தது.
பொதுமக்கள் அதிகளவில் கூடும் பகுதி என்பதையடுத்து இந்த தகவல் போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும் சமூக வலைதளங்களிலும் தகவல் பரவியது.
இதனையடுத்து தகவலறிந்த கண்டோன்மென்ட் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ராவ், வீரமணி, பர்குணன் உள்ளிட்டோர் அந்த இளைஞரை மீட்டு, அவருக்கு ஆடைகள் வாங்கிக்கொடுத்து, சமயபுரம் பகுதியில் உள்ள ஒரு காப்பகத்திற்கு அழைத்துச்சென்று ஒப்படைத்தனர்.
போலீஸாரின் இந்த மனிதாபிமான செயலை பொதுமக்களும், காவல்துறை உயரதிகாரிகளும் வெகுவாக பாராட்டினர்.