திருச்சியில்
உணவுப் பாதுகாப்புத்துறை பயிற்சி பெற்ற 257 பேருக்கு சான்றுகள்.
திருச்சியில் பயிற்சி பெற்ற 257 உணவு வணிகர்களுக்கு உணவுப் பாதுகாப்புத் துறையால் வழங்கப்படும் சான்றுகள் வழங்கப்பட்டுள்ளன.
புதுதில்லி மத்திய உணவு பாதுகாப்பு ஆணையத்தால், உணவு பாதுகாப்பு பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நிகழாண்டில் தொடர்புடைய பயிற்சி பெற்ற திருச்சி அய்மான் கல்லூரியைச் சேர்ந்த சமையற்கலைத்துறை மாணவர்கள் 87 பேர், திருச்சி மாநகராட்சி சில்லறை விற்பனையாளர்கள் 26 பேர்,
மணப்பாறை வட்டார சில்லறை விற்பனையாளர்கள் 33, வையம்பட்டி வட்டார சில்லறை விற்பனையாளர்கள் 50, மன்னச்சநல்லூர் வட்டார சில்லறை விற்பனையாளர்கள் 58 மற்றும் அரிசி விற்பனையாளர்கள் 2 பேர் உள்ளிட்ட 257 பேருக்கு உணவுப் பாதுகாப்புத்துறை சான்றுகள் வழங்கப்பட்டுள்ளன.
அதேபோல திருச்சி கே கே நகர் உழவர் சந்தைக்கும், புத்தம் புதிய தரமான காய்கனிகளை விற்பனை செய்வதை அடுத்து சிறந்த உழவர் சந்தைக்கான சான்று வழங்கப்பட்டுள்ளது. இவற்றை மத்திய உணவுப் பாதுகாப்பு ஆணையத்தின் மூலம் மாவட்ட ஆட்சியருக்கு வரப்பெற்று ஆட்சியரகம் மூலம் விநியோகிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், சான்றுகளை உணவு வணிகர் சங்க நிர்வாகிகளிடமும், கே கே நகர் உழவர் சந்தைக்கான சான்றை வேளாண்துறை துணை இயக்குனர் கு.சரவணனிடமும் மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மல்லிகா, வேளாண் துறை அலுவலர் நவிதா, உணவுப் பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் ஆர்.ரமேஷ்பாபு, துறை அலுவலர்கள் சண்முகசுந்தரம், அன்புச்செல்வன், ஸ்டாலின்பாபு, சையத் இப்ராகிம், வடிவேல் மற்றும் வேளாண்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் உணவு வணிகத்தில் ஈடுபடும் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் அனைவரும் உணவு பாதுகாப்பு பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும் கலப்பட உணவு சம்பந்தப்பட்ட உணவு புகார்களுக்கு 9944959595/ 9585959595
என்ற செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.