காலையிலேயே இடியுடன் வெளுத்து வாங்கும் மழை
சென்னையின் பல்வேறு இடங்களில் காலையிலேயே இடியுடன் கூடிய மழை வெளுத்து வாங்கி வருகிறது.
அண்ணா சாலை, ராயப்பேட்டை, அடையாறு, பட்டினப்பாக்கம், திருவல்லிக்கேணி, மண்ணடி, செங்குன்றம், குளத்தூர், உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்து வருகிறது.
காலையில் நல்ல வெளிச்சம் காணப்பட்ட நிலையில் திடீரென ஏற்பட்ட வானிலை மாற்றத்தால் கருமேகங்கள் திரண்டு இருள் கவ்வியது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்குகள் எரியவிட்டப்படி இயக்கப்படுகின்றன.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஓரளவு நல்ல மழை பெய்து வருகிறது.
இதேபோல் விழுப்புரம், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் காலையில் பெய்து வரும் மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
திருச்சி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை இடியுடன் கூடிய மழைபெய்யக் கூடும். இதனிடையே வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் தமிழகத்தில் மழை நீடிக்கும் எனத் தெரிகிறது.