Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி திருவானைக்காவலில் தாய் மகனை கொன்று டிரைவர் தற்கொலை.

0

'- Advertisement -

 

திருச்சியில் குடும்பத்தகராறில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் பேரன் ஆகியோர் உயிரிழந்தனர்.

திருச்சி திருவானைக்காவல் அய்யன் வெட்டித் தெருவில் உள்ள அடுக்குமாடு குடியிருப்பில் வசித்து வந்தவர் லட்சுமணன். அவர் மனைவி வசந்தா (வயது 68). இவர்களது ஒரே மகன் கார்த்திகேயன் (வயது35). இவர், தஞ்சாவூரை சேர்ந்த வசந்தபிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

இவர்களுக்கு, சாமிநாதன் (வயது 8) என்ற மகன் இருந்தார். கடந்த, 5 ஆண்டுகளாக துபாயில் கார் டிரைவராக பணியாற்றிய கார்த்திக்கேயன், கடந்த, 3 நாட்களுக்கு முன்பு தான் நாடு திரும்பியுள்ளார்

மனைவி மீது அதீத அன்பு வைத்துள்ள கார்த்திக்கேயன் அவரை தொடர்ச்சியாக கண்காணித்து கொண்டிருப்பாராம். வெளிநாட்டில் வேலை செய்தாலும், மனைவி என்ன செய்கிறார்? என்பதை பார்க்க, பெட்ரூம் உட்பட அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தி இருந்ததாகவும் கூறப்படுகிறது.

சந்தேகக் கண்ணோடு கணவன் இருப்பதை வசந்தபிரியா கண்டித்துள்ளார். இதன் காரணமாக, ஊருக்கு திரும்பிய பிறகு இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வழக்கம்போல் காலை கார்த்திக்கேயன், வசந்தபிரியாவை வேலைக்கு அழைத்துச் சென்று விட்டுள்ளார். மதியத்திற்கு பிறகு வசந்தபிரியா போனில் அழைத்தும் யாரும் எடுக்கவில்லை.

உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தகவல் சொல்லி இருக்கிறார். அவர்களும், மாலை முதல் பூட்டப்பட்ட கதவு வெகு நேரம் ஆகியும் திறக்கவில்லை என்பதை தெரிந்து கொண்டனர்.

போனில் அழைத்தும், கதவை தட்டியும் எவ்வித பதிலும் இல்லாததால் பதற்றமடைந்த அவர்கள், ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த ஸ்ரீரங்கம் காவல்துறை உதவி ஆணையர் நிவேதிதா தலைமையிலான போலீசார், கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர்.

அப்போது, கழுத்து, இரண்டு கைகளின் மணிக்கட்டை அறுத்த நிலையில் கார்த்திக்கேயன் மின்விசிறியிலும், பீரோ கைப்பிடியில் வசந்தாவும், கதவின் பின்புற கொக்கியில் சாமிநாதனும் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தனர்.

மூவரின் உடலையும் மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தாய் வசந்தாவையும், மகன் சாமிநாதனையும் தூக்கிலிட்டு கொலைச் செய்துவிட்டு, அதன்பின்னர் கார்த்திக்கேயன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும், கார்த்திக்கேயன் எழுதி வைத்துள்ள கடிதத்தில் ‘எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை.எனக்குப் பிறகு எனது தாயும் மகனும் கஷ்டப்படுவார்கள் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளேன். மனைவி படித்திருப்பதால் அவளது வாழ்க்கையை அவர் பார்த்துக் கொள்வார்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவுச் செய்துள்ள ஸ்ரீரங்கம் போலீசார், மூவர் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்பத் தகராறு காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகன், பேரன் என மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.