Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

டி20 உலக கோப்பை தொடர்.இந்தியா நெதர்லாந்தை வென்றது. ஜிம்பாப்வே இடம் மண்ணை கவ்வியது பாகிஸ்தான்.

0

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்த சுற்றில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் சிட்னி மைதானத்தில் நேற்று மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு.செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக கேப்டன் ரோகித் சர்மாவும், கே.எல்.ராகுலும் களமிறங்கினர். ராகுல் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ரோகித்- கோலி இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை சீரான வேகத்தில் உயர்த்தினர். ரோகித் சர்மா அரைசதமடித்து 53 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து கோலியுடன் சூரியகுமார் யாதவ் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கோலி நடப்பு தொடரில் தனது இரண்டாவது அரைசதத்தை பூர்த்திசெய்தார். அதிரடி காட்டிய சூரியகுமார் யாதவும் 25 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் குவித்தது. இதையடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி விளையாடியது. நெதர்லாந்து அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய விக்ரம்ஜித் சிங் 1 ரன்னில் அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரரான மேக்ஸ் ஓ டவுட் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய பாஸ் டி லீடே 16 ரன்களும் காலின் அக்கர்மன் 17 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். இறுதியில் நெதர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து இந்தியா 56 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் புவனேஸ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல், அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். மேலும் முகமது ஷமி ஒரு விக்கெட் எடுத்தார்.

அதிரடியாக விளையாடி 52 ரன்கள் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த சூரியகுமார் யாதவ் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நேற்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி கத்துக்குட்டி அணியான ஜிம்பாப்வே உடன் மோதியது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜிம்பப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்தது.

131 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் கடைசி வரை போராடி 8 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் 1 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியிடம் மண்ணைக் கவ்வியது.

 

இன்று முதல் போட்டியில் அயர்லாந்து-ஆப்கானிஸ்தான் அணிகளும்

மற்றொரு போட்டியில் இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகளும் மோத உள்ளன.

 

Leave A Reply

Your email address will not be published.