வாக்கு இயந்திரத்தில் முதல் இடத்திலேயே உள்ள உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும்,உருக்கமாக வேண்டுகோள் விடுத்த திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் மகேஷ் பொய்யாமொழி .ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் ஆதரவு .
திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பத்தாளப்பேட்டை, கிருஷ்ணசமுத்திரம் மற்றும் கிளியூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வாக்கு சேகரிப்பின் போது மக்களிடையே அவர் பேசியதாவது:
மக்களுக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, மகளிருக்கு இலவசப் பேருந்து பயணம், தமிழ்ப் புதல்வன் திட்டம் போன்ற முன்னோடித் திட்டங்களை திமுக அரசு சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது.
தொடக்கப் பள்ளி மாணவர்களுக்காகத் தொடங்கப்பட்ட காலை உணவுத் திட்டம், விரைவில் 8-ம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும்.
முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ. 2,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
கடந்த முறை எதிர்க்கட்சியாக இருந்தபோது விடுக்கப்பட்ட 10 கோரிக்கைகளில் 7 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள கோரிக்கைகளும், மக்கள் புதிதாக வைக்கும் கோரிக்கைகளும் வரும் ஐந்தாண்டுகளில் முழுமையாக நிறைவேற்றப்படும்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் அண்மைக்கால விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்த வேட்பாளர், “திமுக 170-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற கருத்துக்கணிப்புகளைத் தாங்கிக் கொள்ள முடியாமல், பதவி வெறியில் அவர் தரக்குறைவாகப் பேசி வருகிறார். அரசியலில் விமர்சனங்கள் இருக்கலாம், ஆனால் வன்மம் இருக்கக் கூடாது,” என்று குறிப்பிட்டார்.
பத்தாளப்பேட்டை ஊராட்சிக்கு வருகை தந்த அவருக்கு, மேளதாளங்கள், தாரை தப்பட்டை முழங்க, குதிரை ஆட்டம் மற்றும் பொம்மை ஆட்டத்துடன் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பெண்கள் ஆராத்தி எடுத்தும், மலர் தூவியும் தனது ஆதரவைத் தெரிவித்தனர்.
“உங்கள் வீட்டுப் பிள்ளையாக மூன்றாவது முறையாக திருவெறும்பூரில் போட்டியிடுகிறேன். வாக்கு இயந்திரத்தில் முதல் இடத்திலேயே உள்ள நமது சின்னத்திற்கு வாக்களித்து, பெரும் வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும்,” என அவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிகழ்வில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் சேகரன், வடக்கு ஒன்றியச் செயலாளர் கருணாநிதி, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் சத்யா கோவிந்தராஜ், பத்தாளப்பேட்டை ஊராட்சித் தலைவர் ரீனா ஜவான் கிளாரெட், திருநெடுங்குளம் முன்னாள் ஊராட்சித் தலைவர் ஸ்ரீநிதி சதீஷ்குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சூரியூர் ஜல்லிக்கட்டு மைதானத்தை அமைத்து தந்ததற்காக, அப்பகுதியைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் திருவெறும்பூர் தொகுதியின் வேட்பாளர் மற்றும் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களை நேரில் சந்தித்து நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்தனர்.

தங்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றி, ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளித்தமைக்காக மகிழ்ச்சி தெரிவித்த ஆர்வலர்கள், எதிர்வரும் தேர்தலில் உதயசூரியன் சின்னத்திற்கு தங்களின் முழு ஆதரவை வழங்குவதாக உறுதி அளித்தனர்.
இந்தச் சந்திப்பின் போது ஜல்லிக்கட்டு விழா கமிட்டியினர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

