Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

முதல்வரை கீழ்த்தரமாக பேசும் எடப்பாடிக்கு மக்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து, அவதூறு அரசியலுக்குத் தக்க பதிலடி கொடுப்பார்கள்.திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் மகேஷ் பொய்யாமொழி பேச்சு

0

'- Advertisement -

மத்திய அரசிடம் காட்ட வேண்டிய வீரத்தை, தமிழக முதலமைச்சர் மீது மலிவான விமர்சனங்களாக எடப்பாடி பழனிசாமி கொட்டி வருகிறார் என்று திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கடுமையாகச் சாடியுள்ளார்.

Ad banner

திருச்சி மாநகராட்சி, திருவெறும்பூர் பகுதிக்குட்பட்ட 39-வது வார்டு பகுதிகளான காட்டூர் பேருந்து நிலையம், எல்லக்குடி மாரியம்மன் கோவில், பிள்ளையார் கோவில், காந்தி நகர் 6-வது தெரு, வசந்தம் நகர், கணேஷ் நகர், கைலாஷ் நகர் ரேஷன் கடை, வின் நகர் மற்றும் பாலாஜி நகர் ஆகிய இடங்களில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் முனைவர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:

“இன்றைய அரசியல் களம் அதன் நாகரிகத் தன்மையை இழந்து வருகிறது. தோல்வி பயம் வந்துவிட்டால் எதை வேண்டுமானாலும் பேசலாமா? கொரோனா காலத்தைப் பற்றிப் பேசும் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் அவர்களைப் பற்றி மிகவும் கீழ்த்தரமான முறையில் ‘பரலோகம் சென்றிருப்பார்’ என்று பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. இத்தகைய வன்மமான பேச்சுகள் அவரின் அதிகார மோகத்தையே காட்டுகின்றன.

நிர்வாக ரீதியாகத் தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டுவதுதான் ஒரு எதிர்க்கட்சித் தலைவருக்கு அழகு. அதை விடுத்து, முதலமைச்சரையும், துணை முதலமைச்சரையும் தனிப்பட்ட முறையில் சாபமிடுவது எந்த விதத்தில் நியாயம்?”

“எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோதுதான் தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அப்போது ‘டிவியைப் பார்த்துதான் தெரிந்துகொண்டேன்’ என்று பொறுப்பற்ற முறையில் பதிலளித்தவர் அவர். நீட் தேர்வால் அனிதா உள்ளிட்ட பல மாணவச் செல்வங்களை நாம் இழந்திருக்கிறோம்.

பாஜகவுடன் கூட்டணியில் இருந்தபோதும், இப்போதும் ஒருமுறையாவது தமிழகத்திற்கு ‘நீட் வேண்டாம்’ என்றோ, ‘மும்மொழிக் கொள்கையைத் திணிக்காதீர்கள்’ என்றோ பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி நேரில் வலியுறுத்தியது உண்டா? அண்ணா பெயரில் கட்சி வைத்துக்கொண்டு, அவர் காட்டிய இருமொழிக் கொள்கையைக் காக்க இவர்களால் முடியவில்லை.”

 

“மத்திய அரசிடம் காட்ட வேண்டிய வீரத்தை, இங்கே முதலமைச்சர் மீது மலிவான விமர்சனங்களாக அவர் வைக்கிறார். வரும் தேர்தலில் திருவெறும்பூர் தொகுதி மக்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து, இத்தகைய அவதூறு அரசியலுக்குத் தக்க பதிலடி கொடுப்பார்கள்.” இவ்வாறு அவர் பேசினார்.

இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்வில் திருச்சி மாநகரச் செயலாளர் மதிவாணன், பகுதி செயலாளர்கள் நீலமேகம், சிவக்குமார், மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ், வட்டக் கழக செயலாளர்கள் வினோத் கனகராஜ், செல்வராஜ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.