இதுதான் எங்களுக்கான நேரம் என்று அடிப்படை வசதிகள் கோரி திருச்சி மாவட்ட மலைவாழ் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு எச்சரிக்கையுடன் தங்களின் போராட்டத்தை அறிவித்துள்ளனர்

எவ்வித வசதிகளும் இல்லாமல் நாங்கள் படும் திண்டாட்டத்திற்கு இந்த தேர்தல் முற்றுப்புள்ளி வைக்குமா என்ற எதிர்பார்ப்பும் அவர்களுக்கு எழுந்துள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 23ம் தேதி நடக்க உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் வேளையில் திருச்சி மாவட்டத்தின் பச்சைமலை மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாத அடிப்படைத் தேவைகளை முன்வைத்து பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்புப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் வாக்களிக்கப் போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். தேர்தல் புறக்கணிப்பில் பிடிவாதமாக உள்ள இப்பகுதி மக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் அரசு அதிகாரிகள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். அப்படி என்னதான் கேட்கிறார்கள் என்று பார்ப்போம்.
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பச்சைமலைப் பகுதியில் சேலம் மற்றும் திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த நான்கு ஊராட்சிகளில் சுமார் 30,000-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். தென்புறநாடு, வாலநாடு, கொம்பைநாடு மற்றும் ஆத்திநாடு ஆகிய இந்த நான்கு ஊராட்சிகளையும் ஒன்றிணைத்துத் தனியான ஒரு நிர்வாக ஒன்றியத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் இவர்களின் முக்கியமான கோரிக்கையாக உள்ளது. இதுதவிர, மலைப்பகுதிக்கு இருவழிச் சாலைகள், அரசு மருத்துவமனை, தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளை, அரசு கலைக் கல்லூரி மற்றும் ஆங்கில வழிப்பள்ளி போன்ற வசதிகள் தங்களுக்கு வேண்டும் என்று நீண்டகாலமாக போராடி வரும் அவர்கள் தற்போது இந்த கோரிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதுகுறித்து தென்புறநாடு பகுதியைச் சேர்ந்த மக்கள் தரப்பில் கூறுகையில், “எத்தனையோ முறை மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 108 ஆம்புலன்ஸ் சேவை கூட இல்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நாங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறோம். எனவே, இம்முறை தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்” என்றனர்.
தங்களது கோரிக்கைகளுக்கு எழுத்துப்பூர்வமான உறுதிமொழி அளிக்காத பட்சத்தில், அரசியல் தலைவர்கள் யாரும் தங்கள் பகுதிக்குள் வாக்குச் சேகரிக்க வரக்கூடாது என்றும் இப்போதே எச்சரிக்கை கொடியை காட்டி விட்டனர். வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும், பதாகைகளை வைத்தும் அவர்கள் தங்களது எதிர்ப்பைத் தீவிரமாகப் பதிவு செய்து வருகின்றனர்.
இது ஒருபுறம் என்றால் மறுபுறம் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட திருப்பாறைத்துறை (நந்தவனம்) பகுதியில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 16 ஆண்டுகளாக தாங்கள் புறக்கணிக்கப்பட்டு வருகிறோம் என்று தங்களின் எதிர்ப்பை கடுமையாக காட்ட ஆரம்பித்துள்ளனர். திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலைப் பணிகளுக்காக அங்கிருந்து வெளியேற்றப்பட்ட இந்தக் குடும்பங்களுக்குத் தாருகாவனேஸ்வரர் கோவில் அருகே நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால், கோவில் நிர்வாகம் இவர்களைக் குத்தகைதாரர்களாக ஏற்க மறுத்ததால், இவர்களால் மின்சாரம், குடிநீர் மற்றும் கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியாமல் போனது.
சமீபத்தில் இவர்கள் தேர்தல் புறக்கணிப்பு குறித்து தெரிவித்ததை அடுத்து வருவாய்த் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் குடிநீர் மற்றும் மின்சார வசதிகள் செய்து தரப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த மக்கள் தங்களது போராட்டத்தைத் தற்காலிகமாகத் திரும்பப் பெற்றுள்ளனர். அதிகாரிகளின் துரித நடவடிக்கையாக தற்போது குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகள் அங்குத் தொடங்கப்பட்டுள்ளன. இருப்பினும், பச்சைமலைப் பகுதி மக்களின் கோரிக்கைகள் இன்னும் நிலுவையில் உள்ளதால், அதிகாரிகள் அவர்களைத் தொடர்ந்து சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். நாட்கள் நெருங்க, நெருங்க என்ன நடக்குமோ. பச்சைமலை மக்கள் சமாதானம் ஆவார்களா? அல்லது தேர்தலை புறக்கணிப்பார்களா என்ற தவிப்பு அதிகாரிகள் மத்தியில் எழுந்துள்ளது.

