Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தூத்துக்குடி + 2 மாணவி கொலை வழக்கு: எஸ் பி யின் விளக்கமும்,அண்ணாமலையின் சந்தேகமும்…..

0

'- Advertisement -

தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தம் கிராமத்தில் 12-ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், 5 பேரின் டி.என்.ஏ மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

இதில், ஒருவரின் டி.என்.ஏ மாதிரி மற்றும் மாணவியின் நகத்தில் இருந்த சிறிய சதைத் துணுக்கு மூலம் நடத்தப்பட்ட பரிசோதனையில் ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்பவர் கொலையாளி எனக் கண்டறியப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் கைதுசெய்யப்பட்டு தொடர்ந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட எஸ்.பி., மதன், “தூத்துக்குடி மாணவி கொலை வழக்கு, போக்சோ வழக்கு என்பதால், சில தகவல்களை மட்டுமே தர முடியும். குற்றப் பின்னணி கொண்டவர்களின் தகவல்களை முழுமையாக ஆய்வு செய்தோம். டிஜிட்டல் ஆவணங்கள், சுமார் 800-க்கும் மேற்பட்டவர்களிடம் நடத்திய நேரடி விசாரணை மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மேலும் 4 டி.எஸ்.பி-க்கள், 6 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 150 காவலர்கள் விசாரணை மற்றும் குற்றவாளிகளைத் தேடும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டனர்.

புலனாய்வுப் பிரிவு, மோப்பநாய் பிரிவு என வெவ்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சம்பவ இடத்தில் சி.சி.டி.வி கேமராக்கள் இல்லை என்ற போதிலும் அந்தப் பகுதியைச் சுற்றி பல பகுதிகளில் உள்ள 98 இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் சேகரிக்கப்பட்ட தகவல் அடிப்படையில் 2,514 தொலைபேசி தகவலும் சேகரிக்கப்பட்டன.

வேறு குற்றப் பின்னணி உள்ள நபர்கள் குறித்து பார்த்து கண்காணித்து, அவர்களிடம் விசாரணை மேற்கொள்ள பல குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். நேரடியாக மற்றும் டிஜிட்டல் முறையில் தகவல் சேகரிக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டது.

சம்பவம் தொடர்பாக அனைத்து விசாரணைகளும் அறிவியல் பூர்வமாக மேற்கொள்ளப்பட்டன. இந்தச் சம்பவத்தில் ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் படத்தையும் பெயரையும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதுவரை அதை பயன்படுத்திய ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தை தொடர்ந்து அனைத்து கிராமங்களிலும் 10 சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து கிராமங்களிலும் பெண் போலீஸார் மூலம் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

விசாரணையின்போது, சம்பவ இடத்திற்கு அருகில் ஒரு சந்தேகத்திற்குரிய இருசக்கர வாகனம் நின்றதும், பின்னர் அது மாயமானதும் தெரியவந்தது. அருகில் இருந்த காற்றாலை (Windmill) சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்த வாகனம் நடமாடியது உறுதியானது. அந்த வாகனத்தின் பதிவு எண் மாற்றப்பட்டிருந்ததும், அது ராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனூர் காவல் நிலையத்தில் பதிவான ‘திருட்டு பைக்’ என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

சமீபத்தில் சிறையிலிருந்து விடுதலையானவர்களின் பட்டியலை அந்தத் திருட்டு பைக்கோடு ஒப்பிட்டுப் பார்த்தபோது, தர்ம முனீஸ்வரன் என்பவர் மீது சந்தேகம் வலுத்தது. இவர் ஏற்கெனவே ஒரு கடுமையான குற்றவழக்கில் தண்டனை பெற்று, கடந்த 2025 டிசம்பர் மாதம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தலைமறைவாக இருந்த தர்ம முனீஸ்வரனை நேற்று தனிப்படை போலீஸார் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

விசாரணையில், மாணவியைத் தனிமையில் வழிமறித்துக் கடத்தி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றபோது மாணவி எதிர்த்ததால், அவரை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். எவ்வித அழுத்தத்திற்கும் இடம் கொடுக்காமல் இந்த வழக்கு விசாரணை முறையாக நடத்தப்பட்டது. இந்த வழக்கை உயர் நீதிமன்றம் கண்காணித்து வருகிறது. குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுத் தருவோம்” என்றார்.

இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வேடநத்தம் கிராமத்தில், பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவியை பாலியல் தாக்குதல் நடத்தி, கொடூரமாகக் கொலை செய்து, பத்து நாட்கள் கடந்தும், காவல்துறை குற்றவாளியைக் கைது செய்யவில்லை.

குற்றவாளியைக் கைது செய்ய வலியுறுத்தி, பொதுமக்களின் கடுமையான போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில், சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்ற நபரைக் கைது செய்திருப்பதாக, திமுக அரசின் காவல்துறை அறிவித்திருக்கிறது. ஆனால், இதில் பல கேள்விகள் எழுகின்றன.

கடந்த 2020 ஆம் ஆண்டு, தூத்துக்குடி எட்டயபுரம் அருகே, 65 வயது முதிர்ந்த பெண்மணியை, பாலியல் தாக்குதலுக்குள்ளாக்கி கொலை செய்த வழக்கில், கடந்த 2022 ஆம் ஆண்டு, சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்ற நபர் கைது செய்யப்பட்டார்.

வழக்கு முடிவில், கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த நிலையில், மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில், அந்த வழக்கு நிறுத்தி வைக்கப்பட்டதாகவும், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாகவும், தற்போது செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

ஒரு வயதான பெண்மணியை, பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கிக் கொலை செய்து ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிக்கு, உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்கும் அளவுக்கு, திமுக அரசு அந்த வழக்கை மெத்தனமாகக் கையாண்டிருக்கிறது. மறுபக்கம், பல வழக்குகள் கொண்ட ஒரு சரித்திரப் பதிவேடு குற்றவாளி, ஜாமீனில் வெளிவரும் போது, அவனைத் தொடர்ந்து கண்காணிக்காமல் தமிழகக் காவல்துறை இருந்திருக்கிறது.

மேலும், சிசிடிவி காட்சிகள் மூலம் இந்தக் குற்றவாளியைப் பிடித்ததாகக் கூறும் காவல்துறை, சிசிடிவியை ஆராய பத்து நாட்கள் எடுத்துக் கொண்டது என்பதும் கேள்விக்குரியதே.

பொதுமக்களுக்கு உண்மை தெரிய வேண்டும். காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் திரு. ஸ்டாலின் இதற்கு பொதுமக்களிடம் விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.