ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 3 குழு வீதம் 27 பறக்கும் படைகள் .45 வாக்கு சாவடிகள் பதற்றமானவை.
தேர்தல் அமைதியாக நடக்க அனைவரும் முழுஒத்துழைப்பு தர வேண்டும், திருச்சி அனைத்து கட்சி கூட்டத்தில் தேர்தல் அதிகாரி சரவணன் பேச்சு திருச்சி மாவட்ட தேர்தல் அதிகாரி சரவணன் தலைமையில் அனைத்து கட்சியினர் கூட்டம் நடைபெற்றது.
உதவி தேர்தல் அதிகாரி பாலாஜி, மாநகர போலீஸ் கமிஷனர் காமினி, துணை போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம், மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் உதவி அதிகாரிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி சரவணன் பேசும்போது கூறியதாவது:-
திருச்சி மாவட்டத்தில் 45 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் அமைதியான முறையில் தேர்தல் நடத்த முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
மாவட்டத்தில் தேர்தல் நடத்த தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணி முடிவடைந்துள்ளது.
தொகுதிக்கு மூன்று குழு வீதம் 27 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. தேர்தல் தொடர்பான புகார்களை அதில் தொடர்பு கொண்டு தெரிவித்துக் கொள்ளலாம்.
வேட்பாளர் பெயர்கள் போட்டு கூட்டங்கள் நடத்தினால் வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்க்கப்படும்.
அதே நேரம் அந்த வேட்பாளர் பெயர் இல்லாமல் அவர் சார்ந்த கட்சி கூட்டங்கள் நடத்தப்பட்டால் மாவட்ட கட்சி கணக்கில் அது சேர்க்கப்படும்.
இந்த முறை கடுமையாக செலவு கணக்கு சரி பார்க்கப்படும். எனவே முறையாக செலவு கணக்குகளை பராமரித்து முறையாக தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தை தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திருச்சி மாவட்ட கல்யாண மண்டபம் மற்றும் கூட்ட அரங்குகள் உரிமையாளர்களுக்கான தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்டம் முழுவதிலும் இருந்து கல்யாண மண்டபம் உரிமையாளர்கள் கூட்ட அரங்குகள் உரிமையாளர்களுக்கான தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பான கூட்டம் நடந்தது, இதில் மாவட்ட தேர்தல் அதிகாரி சரவணன் கலந்து கொண்டு தேர்தல் விதிகள் குறித்து அவர்களுக்கு விளக்கமாக எடுத்துக் கூறினார்.

