திருச்சியில்
கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல்-கத்திக்குத்து . 2 பேர் காயம் .
திருச்சி வயலூர் ரோடு கத்தரிக்காய் வாய்க்கால் பகுதியில் உள்ள இருசக்கர வாகன பழுது நீக்கு பட்டறை உள்ளது.
திருச்சி உறையூர் கீழக்கல் நாயக்கன் தெருவை சேர்ந்தவர் மதன் (வயது19) காந்தி மார்க்கெட் பால் பண்ணை விசுவாச நகர் பகுதியைச் சேர்ந்த பூவரசன் (வயது 18) ஆகிய இரண்டு பேரும் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை அங்கே நின்று பேசிக் கொண்டிருந்தனர். இவர்கள் இருவரும் திருச்சியில் உள்ள வெவ்வேறு கல்லூரிகளில் படித்து வருகின்றனர். கடந்த நான்கு மாதமாக மதன் கல்லூரிக்கு செல்லவில்லை.
இவர்கள் இரண்டு பேரும் அந்த ஒர்க் ஷாப் முன்பு நின்று பேசிக் கொண்டிருந்த போது இரண்டு மோட்டார் சைக்கிள்களில் மதன் படிக்கும் கல்லூரியைச் சேர்ந்த ஸ்ரீரங்கம் அபிஷேக், மதுரை ஹாரிஸ், ரோஹித் மற்றும் மூன்று மாணவர்கள் வந்து உள்ளனர். பின்னர் எதற்காக முறைக்கிறாய் என கேட்டு மதனை தாக்க முற்பட்டனர் அப்போது பூவரசன் அதை தடுத்து உள்ளார். அதைத் தொடர்ந்து ஆறு மாணவர்களும் மதன் மற்றும் பூவரசன் ஆகிய இரண்டு பேரையும் கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பி சென்று உள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த இரண்டு பேரும் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இது குறித்து மதன் அளித்த புகாரின் அடிப்படையில் உறையூர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இப்பகுதியில் உள்ள பிரபல கல்லூரியில் படிக்கும் மாணவிகள் பல்வேறு தனியார் (அனுமதி பெற்றதா என்ன தெரியவில்லை) மகளிர் தங்கும் விடுதியில் தங்கி உள்ளனர்.சில மாணவர்கள் மாணவிகளை காதலிப்பதாக கூறி அந்த விடுதி நிற்பது வழக்கம்.இதனால் இது காதல் விவகாரத்தில் நடந்த சம்பவமாக இருக்கும் என அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.
ஏனென்றால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதல் விவகாரத்தில் கல்லூரி எதிரில் உள்ள பழமுதிர்ச்சோலை வாசலில் வைத்து இதேபோன்று கத்தி குத்து சம்பவம் நடைபெற்றது போலீஸ், கேஸ் என சென்றால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கும் என அப்பகுதியில் உள்ள பிரபலமானவர் பேசி இருதரப்பையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.எனவே பிங்க் பெட்ரோல் வாகனம் இப்பகுதியில் அதிக ரவுண்ட்ஸ் வர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

