அவர்களாகவே தமிழர் தேசம் கட்சிக்கு 5 தொகுதிகளை ஒதுக்குவார்கள். மாநாட்டு விளக்க பொதுக்கூட்டத்தில் கே.கே . செல்வகுமார் பேச்சு.
அ.தி.மு.க. -பாஜக நம்மை உதாசீனப்படுத்தியது;
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தி.மு.க. கூட்டணியை 234 தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்யுங்கள் திருவானைக்கோவில் பொதுக்கூட்டத்தில் கே.கே.செல்வகுமார் பேச்சு.
திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட தமிழர் தேசம் கட்சி சார்பில் முத்தரையர்களின் அரசியல் அதிகார மீட்பு மாநாட்டு தீர்மான விளக்க பொதுக்கூட்டம்
திருவானைக்கோவிலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் தமிழர் தேசம் கட்சி மற்றும் வீர முத்தரையர் முன்னேற்ற சங்க நிறுவனர் மற்றும் தலைவர் கே. கே.செல்வகுமார் எழுச்சி பேருரை ஆற்றினார் அப்போது அவர் கூறியதாவது;-
நமது முத்தரையர் சமூகம் பட்டயம் எழுதிக் கொடுத்தது போல் இரட்டை இலைக்கு மட்டுமே வாக்களித்து வந்தது. வாக்களித்த சமூகத்தை அவர்கள் வாழ வைக்கவில்லை. முதலமைச்சராக ஆக்கி அழகு பார்த்த இந்த சமூகத்தை உதாசீனப்படுத்தினார்கள். கேவலப்படுத்தினார்கள். சில பேர் என்னிடம் ஆர்.எஸ்.எஸ்.பயிற்சி பெற்றதாக எல்லாம் பேசி இருக்கிறீர்கள். இப்போது எதிர் முகாமுக்கு போயிருக்கிறீர்களே என கேட்டார்கள். என் சமூகம் மற்றும் என் சமூகத்தோடு இணைந்த சமூகங்களுக்காக எந்த முடிவை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் எடுப்பேன்.
ஓ பன்னீர்செல்வத்திற்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் கடுமையான பனிப்போரில், மதுரைக்குச் செல்ல கடுமையான எதிர்ப்பு இருந்த நேரத்தில் மதுரையில் 3 லட்சம் பேரை திரட்டி வலையர் மாநாட்டினை நாங்கள் நடத்தி ஆதரவளித்தோம்.
அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி வலையர் புனரமைப்பு வாரியத்தை அமைப்பேன் என சொல்லிவிட்டு போற போக்குல ஒரு ஊனமான பிள்ளையை பெற்று போட்டு போகிறது போல
வலையர் புனரமைப்பு வாரியத்தை அமைத்தார். ஆனால் அதற்கு நிதி ஒதுக்கவில்லை. தலைவர் நியமிக்கவில்லை செயலாளரை நியமிக்கவில்லை. அதேபோன்று மத்திய அரசிடம் தேசிய மீனவர் நல வாரியத்தை கேட்டேன். ஏனென்றால் ராமநாதபுரம் மாவட்டத்தில் பாரம்பரியமாக மீன்பிடிப்பவர்கள் வலையர் எனும் முத்தரையர் சமூகத்தை சேர்ந்தவர்கள். மூன்று மாதத்தில் வாரியம் அமைக்கப்படும் என்று சத்தியம் பண்ணி சொல்லிவிட்டு மூன்று வருஷம் போன பிறகும் வாரியம் அமைக்கவில்லை. டி. டி. வி. யை மிரட்டலாம் இபிஎஸ்ஐ மிரட்டலாம். எங்களுக்கு மடியில் கனமில்லை வழியில் பயமில்லை. முத்தரையர் சமூகத்துக்கு மட்டுமல்ல ஒடுக்கப்பட்ட கைவிடப்பட்ட அத்தனை சமூகத்துக்குமான கட்சியாக தமிழர் தேசம் கட்சி நிற்கிறது. எங்களை சின்ன வட்டத்துக்குள் அடைக்க பார்க்காதீர்கள். வையம்பட்டியில் முடி திருத்தும் மருத்துவ சமூக மக்கள் 75 வருட காலமாக சாலை வசதி இல்லாமல் இருந்தபோது தமிழர் தேசம் கட்சி சாலை மறியல் செய்து இன்றைக்கு சாலை வசதியை பெற்று தந்தது. அதனுடைய விளைவு தான் இன்றைக்கு தமிழக முதலமைச்சர் நம்மை அழைத்து நமக்கான அங்கீகாரத்தை கொடுத்திருக்கிறார். ஒரு தொகுதி கொடுக்கிறேன் என சொல்லி இருக்கிறார்கள்.
நம்மை தி.மு.க. கூட்டணியில் சேர்த்துக்கொண்டது கூடுதல் பலம் என்பதை நாம் நிரூபித்து காட்ட வேண்டும்.
200 தொகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும் முதல்வர் சூளுரைத்து வருகிறார். நாம் சேர்ந்ததால் கூடுதல் தொகுதியில் தி.மு.க. வெற்றி பெற வேண்டும். அந்த வகையில்
234 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அர்ப்பணிப்போடு பணியாற்றிட வேண்டும். அவ்வாறு நாம் பணியாற்றினால் அடுத்த தேர்தலில் அவர்களாகவே தமிழர் தேசம் கட்சிக்கு ஐந்து சட்டமன்ற தொகுதிகளை ஒதுக்குவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் குருமணிகண்டன், மாநில பொதுச் செயலாளர் தளவாய் ராஜேஷ் ,மாநில இணை பொதுச் செயலாளர் கள்ளிக்குடி எம். ராஜேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மேலும் கூட்டத்தில் மாநில செயலாளர் பரமசிவம் ஐயா, தமிழர் தொழிற்சங்க நடுவம் மாநில செயலாளர் வழக்கறிஞர் கௌதம், மாநில இளைஞரணி செயலாளர் தீனா தேவேந்திரன்,மாவட்ட செயலாளர்கள் பி.எஸ். பனையடி, வள்ளல் மணி, துரைராஜ், கோல்டு குமார் ,மண்ணை சதீஸ்வரன், லால்குடி குமார் ,கே.எஸ். எட்வர்ட், வீர முத்தரையர் முன்னேற்ற சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் வைரவேல் அம்பலக்காரர், மாநில இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் துரை. குணசேகரன் முத்துராஜா, மாநிலத் துணைத் தலைவர் அடையாளம் கோ. சம்பத் முத்துராஜா, மண்ணை ரவிச்சந்திரன் முத்துராஜா வடமேற்கு மாவட்ட இணை செயலாளர் தொட்டியம் ஜெயராஜ் உள்ளிட்ட திரளான பொதுமக்கள், தமிழர் தேசம் கட்சி மற்றும் வீர முத்தரையர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பொதுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாநில இணை பொதுச் செயலாளர் கள்ளிக்குடி ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

