திருச்சி மாவட்டம், தாத்தையங்கார்பேட்டை அடுத்த ஊரக்கரை பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி சரண்யா. இந்தத் தம்பதிக்கு 11 மாதத்தில் ரித்விக் என்ற ஆண் குழந்தை இருந்தது.
நேற்று மாலை சரவணன் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தனது இருசக்கர வாகனத்தில் காட்டுப்புத்தூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த சரண்யா, தனது 11 மாதக் குழந்தையை மடியில் வைத்திருந்தார். பைக் வேகமாகச் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாகத் தாயின் பிடியிலிருந்து நழுவிய குழந்தை, சாலையில் தூக்கி வீசப்பட்டது.
தலையில் பலத்த காயமடைந்த குழந்தையை பெற்றோர் உடனடியாக மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின், மேல் சிகிச்சைக்காகத் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இருப்பினும், அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட குழந்தை ரித்விக், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தது.
இந்த விபத்து குறித்து காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், சாலைப் பள்ளத்தில் ஏறி இறங்கியபோது ஏற்பட்ட அதிர்வினால் குழந்தை நழுவியிருக்கலாம் அல்லது தாய் நிலைதடுமாறியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இருசக்கர வாகனத்தில் குழந்தையுடன் பயணிக்கும் தம்பதியினர் அஜாக்கிரதையாக பயணம் மேற்கொள்ள கூடாது என்பதற்கு இந்த விபத்து ஒரு எச்சரிக்கை எடுத்துக்காட்டு.

