Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மணப்பாறையில் கொலை செய்யப்பட்டவர் தம்பியை விசாரணைக்கு அழைத்து சென்றதால் சாலை மறியல்

0

'- Advertisement -

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே எரிவாயு உருளை விநியோகம் செய்பவா் கொலை செய்யப்பட்டது நேற்று தெரியவந்து உள்ளது.

இந்த சம்பவம் தொடா்பாக கொலையானவரின் தம்பியை போலீஸாா் விசாரணைக்கு அழைத்து சென்றதால் உறவினா்கள் மறியலில் ஈடுபட்டனா்.

 

மணப்பாறையை அடுத்த காவல்காரன்பட்டியை சோ்ந்த பொன்னுச்சாமி மகன் சிவசுப்பிரமணியன் (வயது 51). இவா், தாதகவுண்டம்பட்டியில் உள்ள சமையல் எரிவாயு உருளை விநியோகிக்கும் நிறுவனத்தில் வீடு வீடாக சென்று எரிவாயு உருளை விநியோகம் செய்யும் வேலை செய்து வந்தாா். இவருக்கு திருமணமாகி மனைவி, 3 மகள்கள் உள்ளனா். சிவசுப்பிரமணியன், தனது தாய் மற்றும் சகோதரன் குடும்பத்தினருடன் ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்தனா்.

 

இந்நிலையில், சிவசுப்பிரமணியன் திங்கள்கிழமை இரவு வீட்டின் வெளியே வராந்தாவில் கயிற்று கட்டிலில் தூங்கியுள்ளாா். குடும்பத்தினா் வீட்டினுள் தூங்கினா். நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை குடும்பத்தினா் வெளியே வந்து பாா்த்தபோது, சிவசுப்பிரமணியன் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தாா்.

 

தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற காவல் துணைக் கண்காணிப்பாளா் காவியா, மணப்பாறை காவல் ஆய்வாளா் ராஜாசோ்வை, புத்தாநத்தம் ஆய்வாளா் விஜயலட்சுமி, வையம்பட்டி ஆய்வாளா் தனபாலன் தலைமையிலான போலீஸாா் விசாரித்தனா்.

சிவசுப்பிரமணியன் உடலை கைப்பற்றிய போலீஸாா், கூறாய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் குறித்து புத்தாநத்தம் போலீஸாா் வழக்குப் பதிந்து

தம்பியிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

 

சம்பவம் தொடா்பாக, உயிரிழந்த சிவசுப்பிரமணியனின் தம்பி சக்திவேல் (வயது 49) என்பவரை பிற்பகல் 1 மணியளவில் விசாரணைக்காக போலீஸாா் அழைத்து சென்ற நிலையில், இரவு 7.30 மணி வரை அவரை பற்றி எந்தவித தகவலும் இல்லை எனக்கூறி, உறவினா்களும், ஊா் மக்களும் மணப்பாறை – துவரங்குறிச்சி சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

 

சமரச பேச்சுவாா்த்தைக்கு சென்ற டிஸ்பி காவியா மற்றும் ஆய்வாளா் விஜயலெட்சுமியிடம், சக்திவேலின் குழந்தைகள் மற்றும் உறவினா்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். சக்திவேலை விடுவித்து, உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

 

இந்த மறியலால் மணப்பாறை – துவரங்குறிச்சி சாலையில் போக்குவரத்து முடங்கியது.

இதைத் தொடா்ந்து, காவல் விசாரணையில் இருந்த சக்திவேலை சந்தித்து திரும்பிய உறவினா்கள், போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் உரிய விசாரணை நடைபெறுவதாகவும், சக்திவேல் நலமுடன் இருப்பதாகவும் கூறியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.