திருச்சி:குதிரை பந்தயத்தில் காயமடைந்த திமுக நிர்வாகியை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மனிதநேயத்துடன் தாங்கி பிடித்து உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் இடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
திருவெறும்பூர் குண்டூர் நவல்பட்டு பகுதியில், தமிழ்நாடு மாநில குதிரை உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் நலச்சங்கத்தின் சார்பில் முதலாம் ஆண்டு குதிரைப் பந்தயப் போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியைத் தமிழகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வின் போது எதிர்பாராதவிதமாக நடந்த விபத்தில், குதிரை வண்டி மோதி கீழே விழுந்த முன்னாள் திருவெறும்பூர் ஒன்றியத் துணை தலைவரை, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைதாங்கலாகத் தூக்கி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
நவல்பட்டு 100 அடி சாலையில் நடைபெற்ற இந்தப் போட்டி, புதுக் குதிரை (பிரிவு 1 மற்றும் 2), அளவு குதிரை (43 மற்றும் 45), நடுக் குதிரை மற்றும் பெரிய குதிரை என ஆறு பிரிவுகளில் நடத்தப்பட்டது.
புதுக் குதிரை (பிரிவு 1, 2): முதல் பரிசு ரூ.20 ஆயிரம், இரண்டாவது பரிசு ரூ.15 ஆயிரம், மூன்றாவது பரிசு ரூ.12 ஆயிரம், நான்காவது பரிசு ரூ.10 ஆயிரம் எனப் பரிசுகள் வழங்கப்பட்டன.
பெரிய குதிரை (10 மைல் தூரம்): முதல் பரிசு ரூ.50 ஆயிரம், இரண்டாவது பரிசு ரூ.40 ஆயிரம், மூன்றாவது பரிசு ரூ.30 ஆயிரம், நான்காவது பரிசு ரூ.15 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டது.
இவை தவிர, மற்ற பிரிவுகளுக்கும் கவர்ச்சிகரமான ரொக்கப் பரிசுகளும் சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

புதுக் குதிரை பிரிவில் வெற்றி பெற்ற குதிரை உரிமையாளர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பரிசுகளை வழங்கினார். பின்னர், 43 அளவு குதிரைப் போட்டியை அவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
அப்போது, திருவெறும்பூர் ஒன்றிய முன்னாள் துணை தலைவரும், திமுக பொதுக்குழு உறுப்பினருமான நவல்பட்டு சண்முகம், குதிரை வண்டி மோதியதில் கீழே விழுந்து தலையில் பலத்த அடிபட்டது.
உடனடியாகச் செயல்பட்ட அன்பில் மகேஷ், காயமடைந்த நவல்பட்டு சண்முகத்தைத் தாங்கலாகத் தூக்கி, உடனடியாகத் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
காயமடைந்த திமுக நிர்வாகியை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மனிதநேயத்துடன் தாங்கி பிடித்து உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் இடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

