தமிழகம் முழுவதும் அரசு மற்றும் ஆர்டி அதிகாரிகள் வாகனங்களை சீராக சோதித்து, போலி பதிவுகளை தடுப்பதில் கடுமையாக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இதனால் பயணிகள் பாதுகாப்பும், சட்டப் பின்பற்றலும் உறுதி செய்யப்படுகின்றன. அந்தவகையில் திருப்பத்தூர் மாவட்டத்திலும் அதிரடி ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து கழகத்தின் விதிமுறைகளை மீறக்கூடாது, அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று, தமிழக அரசு ஒவ்வொருமுறையும் எச்சரித்தபடியே வந்தாலும், கட்டண கொள்ளை என்பது பேருந்துகளில் தமிழகத்தில் அதிகரித்தபடியே உள்ளது… குறிப்பாக ஒவ்வொரு வருடமும் பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில், இதுபோன்ற புகார்கள் மலிந்து வருகின்றன..
அதேபோல தமிழ்நாடு போக்குவரத்துச் சட்டப்படி, தமிழ்நாடு பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டிற்குள் தொடர்ந்து இயக்கப்பட வேண்டும் என்பது விதியாகும்.. ஆனால், கடந்த வருடம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா என அண்டை மாநிலங்கள் மட்டுமல்லாமல் அஸ்ஸாம் வரையிலான வெளிமாநிலங்களின் பதிவு எண்கள் கொண்ட பேருந்துகள் தமிழ்நாட்டில் இயக்கப்பட்டது.
அரசின் உத்தரவை மதிக்காமல் பல்வேறு ஆம்னி பேருந்துகள் பழைய பதிவெண்களிலேயே இயக்கப்பட்டது தெரியவந்தது.. அதுமட்டுமல்ல, ஒரே பதிவு எண்களில் 4 பஸ்களை ஆம்னி இயக்கப்பட்டதும் பெரும் அதிர்ச்சியை அப்போது உண்டுபண்ணியிருந்தது நினைவிருக்கலாம்..
இந்நிலையில் ஒரே பதிவு எண்ணில் பல பஸ்கள் திருப்பத்தூர் சாலையில் ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர்-நாட்றம்பள்ளி சாலையில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பன்னீர்செல்வம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த, ஒரு தனியார் சுற்றுலா பஸ்ஸை நிறுத்தி, அதன் பதிவு எண்ணை ஆய்வு செய்தார்..
அப்போது அந்த பதிவ எண்ணில் ஏற்கனவே கூமாபட்டி பகுதியில் ஒரு தனியார் பேருந்தும், திருவண்ணாமலை ஆர்.டி.ஒ அலுவலகத்தில் ஏற்கனவே பிடிபட்ட பேருந்தும் ஒரே பதிவு எண்ணில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.. அதாவது, ஒரே பதிவ எண் மூன்று தனித்தனி பேருந்துகளில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வு நடப்பதற்குள் அந்த பஸ் டிரைவர் எகிறி தப்பிவிட்டார்.. இதையடுத்து, அந்த சுற்றுலா பேருந்தை உடனடியாக பறிமுதல் செய்து, தப்பி ஓடிய டிரைவரையும் காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
கடந்த வருடமும் இப்படித்தான் 2 இரண்டு சுற்றுலா பேருந்துகள் ஒரே பதிவு எண்ணைப் பயன்படுத்தியதால் பிடிக்கப்பட்டிருந்தது…
இப்போது திருப்பத்தூர் ஆர்டிஓ அலுவலகத்தில் மொத்தம் மூன்று போலி சுற்றுலா பேருந்துகள் பிடிபட்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது.

