பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை ராமதாஸ், மகன் அன்புமணி ராமதாஸ் இடையே தொடர்ந்து மோதல் முற்றி வருகிறது.
அன்புமணி ராமதாஸை மிகக் கடுமையாக விமர்சித்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார் ராமதாஸ். இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் சிக்கல் இன்றி எதிர் கொள்ளும் வகையில் அன்புமணி ராமதாஸ் முக்கிய முடிவு எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதை அறிந்த ராமதாஸ் தரப்பு அதிர்ச்சியில் இருப்பதாகவும் தைலாபுரத்திலிருந்து சில தகவல்கள் உலாவுகின்றன.
தமிழகத்தில் உள்ள பழமையான அரசியல் கட்சிகளில் ஒன்று பாட்டாளி மக்கள் கட்சி. வன்னியர் சங்கமாக இருந்த இயக்கத்தை கட்சியாக உருவாக்கியவர் மருத்துவர் ராமதாஸ். தொடர்ந்து கட்சியின் எதிர்காலம் கருதி கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக தலைவராக இருந்த ஜிகே மணியை நீக்கிவிட்டு அன்புமணி ராமதாசை தலைவர் ஆக்கினார்.
அதற்கு முன் இளைஞரணி தலைவராக அன்புமணி ராமதாஸ் இருந்தது குறிப்பிடத்தக்கது. இது ஒருபுறம் இருக்க பாமகவின் தலைவரான அன்புமணி கட்சிக்குள் தனது செல்வாக்கைப் பெருக்கிக் கொண்டார். கட்சியின் எதிர்காலம் அவர் தான் என்பதால் பெரும்பாலான நிர்வாகிகள் அவர் பின்னர் சென்றனர்.
இந்த நிலையில் மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாகவும் 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாகவும் தந்தை மகன் இடையே மோதல் வெடித்தது. தற்போது அது உச்சத்தை சந்தித்திருக்கிறது. தொடர்ந்து இறுதி தரப்பும் ஆதரவாளர்களை நீக்குவதும், சேர்ப்பதுமாக அதிரடி காட்டி வருகின்றனர். தேர்தல் ஆணையம், நீதிமன்றம் ஆகியவை அன்புமணி ராமதாஸ் பாமகவின் தலைவராகவும் கட்சியின், சின்னம், பெயர், கொடி உள்ளிட்டவை அவருக்குத்தான் சொந்தம் என அங்கீகரித்ததாக சொல்லப்படுகிறது.
ஆனால் பொய்யான தகவல்களை கொடுத்திருக்கிறார் அன்புமணி என மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார் ராமதாஸ்.
இது ஒருபுறம் இருக்க நாளை பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு பொதுக்குழு சேலத்தில் நடைபெறும் என ராமதாஸ் அறிவித்திருக்கிறார். அந்த பொதுக்குழு தங்களை கட்டுப்படுத்தாது எனவும் இது செல்லத்தக்கது அல்ல என தேர்தல் ஆணையத்துக்கு புகார் கொடுத்திருக்கிறது அன்புமணி தரப்பு.
இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு அதிமுக பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்துவிட்டார்.
அன்புமணி, 25 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் எனவும், ஒரு மாநிலங்களவை சீட்டு வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள ராமதாஸ் தரப்பு திமுகவுடன் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கையெழுத்திடும் அதிகாரம் அன்புமணி ராமதாஸுக்கு தான் இருக்கிறது என தேர்தல் ஆணையம் கூறி உள்ளது.
இந்த நிலையில் கட்சியில் தனக்கு இருக்கும் செல்வாக்கை நிலைநிறுத்த ராமதாஸ் போராடி வரும் நிலையில் அவருக்கு எதிரான புதிய அஸ்திரம் ஒன்றை அன்புமணி எடுத்து உள்ளார்.
அதாவது பாட்டாளி மக்கள் கட்சியின் சின்னம், கொடி, பெயர் ஆகியவற்றை ராமதாஸ் பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது.
ராமதாஸ் தரப்பு மீது கோபம் இல்லை என்றாலும், அவர் உடன் இருக்கும் ஜி கே மணி, அருள் உள்ளிட்டோர் தொடர்ந்து அன்புமணி ராமதாசை சீண்டி வருகின்றனர்.
இதனால் அவர்களுக்கு செக் வைக்கும் வகையில் இந்த நடவடிக்கையை அன்புமணி ராமதாஸ் எடுக்க இருப்பதாக பாமகவினர் கூறுகின்றனர்.

