தவெகவில் தொடரும் உட்கட்சி பூசல் .பிளக்ஸில் ஏன் என் படம் இல்லை எனக் கேட்டதால் நிர்வாகி தற்கொலை முயற்சி.
தூத்துக்குடி மாவட்டத்தில் விஜயின் தமிழக வெற்றி கழக பெண் நிர்வாகி அஜிதா தற்கொலை முயற்சி செய்த இன்று, அடுத்த அதிர்ச்சியாக திருவள்ளூரிலும் மற்றொரு தவெக நிர்வாகி பேனர் விவகாரத்தில் ஏற்பட்ட மோதலால் பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் தெற்கு மாவட்டத் தமிழக வெற்றிக் கழகத்தின் பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட திருப்பாச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் சத்திய நாராயணன். இவர் தவெக-வின் கிளைக் கழக நிர்வாகியாக உள்ளார். கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து தனது பகுதியில் சத்திய நாராயணன் பேனர் ஒன்றை வைத்திருந்தார்.

அந்தப் பேனரில் பூண்டி ஒன்றியச் செயலாளர் விஜய் பிரபுவின் புகைப்படம் இடம்பெறவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விஜய் பிரபு, சத்திய நாராயணனைத் தொடர்புகொண்டு, “எனது புகைப்படம் இல்லாமல் எப்படி பேனர் வைக்கலாம்?” எனக் கூறி மிரட்டியதாகத் தெரிகிறது. கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தம்மை மிரட்டியதால் மனமுடைந்த சத்திய நாராயணன், இன்று தனது வீட்டில் கழிவறையைச் சுத்தம் செய்ய வைத்திருந்த பினாயிலை குடித்துத் தற்கொலைக்கு முயன்றார்.
மயங்கிய நிலையில் இருந்த அவரை மீட்ட குடும்பத்தினர், உடனடியாகத் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருவள்ளூர் தெற்கு மாவட்டத்தில், வடக்கு மாவட்டச் செயலாளரின் ஆதரவாளர்களுக்கு உரிய பதவிகள் வழங்கப்படுவதில்லை என்ற உட்கட்சிப் பூசல் ஏற்கனவே இருந்து வந்த நிலையில், இந்தச் சம்பவம் அதனை உறுதிப்படுத்தியுள்ளது.

ஒரே நாளில் இரண்டு மாவட்டங்களில் தற்கொலை முயற்சிகள் நடந்துள்ளன: தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் அஜிதா ஆக்னல் தூக்க மாத்திரை உட்கொண்டார். திருவள்ளூரில் பேனர் விவகாரத்தில் மிரட்டப்பட்டதால் சத்திய நாராயணன் பினாயில் குடித்தார்.
தற்போது மதுரை, திருச்சி, தூத்துக்குடி மற்றும் திருவள்ளூர் எனப் பல மாவட்டங்களில் தவெக-வின் உட்கட்சிப் பிரச்சினைகள் வீதிக்கு வந்துள்ளது அக்கட்சித் தலைமைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றி கழகம் தொடங்கி இன்னும் தமிழ்நாட்டில் ஒரு கவுன்சிலர் கூட இல்லை.தமிழகம் முழுவதும் முறையாக மாவட்ட செயலாளர்கள் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படவும் இல்லை.அடுத்ததாக ஆட்சியைப் பிடிக்கப் போவது நாங்கள் தான் என கூறிவரும் கட்சியில் அடிப்படையில் உறுப்பினர் சேர்க்கை,பூத்து கமிட்டி ,எதையும் சரி செய்யும் முன்பே வேட்பாளருக்கு இவ்வளவு என பேரும் பேசுவது,பாலியல் புகார்,உட்கட்சி பூசல் என இந்தக் கட்சிப் பிரச்சனை அவர்கள் வளர்ச்சிக்கு பெரும் முட்டுக்கட்டையாக இருக்கும் என கூறப்படுகிறது.

