அப்துல் கலாம் போன்று கிராமப்புற மாணவர்களை சிறந்த விஞ்ஞானிகளாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் திருச்சி துவாக்குடிஅரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.6.09 கோடி மதிப்பில் ரோபோட்டிக் ஆய்வகத்தைத் திறந்து வைத்த அமைச்சர்கள்.
முதல்வரும், அமைச்சர்களும் மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்:
சிலர் அரசுக்கு எதிராக,
அரசியலுக்காக தவறான பிரச்சாரங்களை மேற்கொள்கிறார்கள்.
திருச்சி அரசு விழாவில் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் இன்று திருச்சி துவாக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள எந்திரவியல் ஆய்வகத்தை திறந்து வைத்து, கையேடுகளை வெளியிட்டு எந்திரவியல் ஆய்வகங்களின் செயல்பாடுகளை பார்வையிட்டு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்கள்.
இந்நிகழ்வில் மாநில திட்ட இயக்குநர் எம்.ஆர்த்தி, பள்ளிக்கல்வி இயக்குநர் முனைவர் ச.கண்ணப்பன் , தொடக்ககல்வி இயக்குநர் நரேஸ், இணை இயக்குநர் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.பாலாஜி, நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குநர் தானுமூர்த்தி, திருச்சி மாநகராட்சி மண்டல குழு தலைவர் மதிவாணன்,
துவாக்குடி நகர் மன்ற தலைவர்காயாம்பு, முதன்மை கல்வி அலுவலர் கோ.கிருஷ்ணப்பிரியா மற்றும் அரசுத் துறை அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.
திருச்சி துவாக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவை தொடர்ந்து, திருச்சி துவாக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 15 அரசு பள்ளிகளில் எந்திரவியல் ஆய்வகம் மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பேசுகையில் …
அப்துல்கலாம் போன்ற சிறந்த விஞ்ஞானியாக கிராமப்புற மாணவர்களை உருவாக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு, எந்திரவியல் (ரோபோட்டிக்) ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது என்றார்.

நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில் …
தமிழக அரசின் அனைத்து துறை அமைச்சர்களும், அதிகாரிகளும் மக்களுக்காக தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், சிலர் அரசுக்கு எதிராக, அரசியலுக்காக, தவறான பிரச்சாரங்களை மேற்கொள்கிறார்கள். தமிழக முதல்வரும், அமைச்சர்களும், மக்களுக்காக எத்தகைய பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்பதை மாணவர்கள் தெரிந்து கொண்டு தங்களது பெற்றோர்களிடம் எடுத்துக் கூற வேண்டும் என்றார்.

தமிழக அரசு பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடம் பிரச்சனைகளை தீர்க்கும் திறனை வளர்க்கவும், குழுவாக இணைந்து செயல்படக்கூடிய திறனை கற்றுக் கொள்ளவும், படைப்பாற்றலை வளர்க்கவும், ₹6.09 கோடி மதிப்பீட்டில் எந்திரவியல் ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக காஞ்சிபுரம், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, சேலம், தூத்துக்குடி, திருப்பத்தூர், திருவாரூர், தர்மபுரி, திருச்சிராப்பள்ளி, கள்ளக்குறிச்சி, சென்னை, கோவை, சிவகங்கை, வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய 15 மாவட்டங்களில் எந்திரவியல் ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது.
இதற்கான பாடத்திட்டம் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆதரவுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் வகுப்பு ஒன்றுக்கு 11 வகையான உபகரணங்கள் வாயிலாக, பத்து பரிசோதனைகள் உருவாக்கப்பட்டு, 90 விழுக்காடு செய்முறை கற்றலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
ரோபோடிக்ஸ் மற்றும் ட்ரோன் ஆகிய தலைப்புகளில் தனி பாட புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த புத்தகங்களை அமைச்சர் கே.என்.நேரு அறிமுகம் செய்தார். அதனை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாணவர்களுக்கு வழங்கினார்.

