ஆஸ்திரேலியாவில் வேலை வாங்கித்தருவதாக இளைஞரிடம் ரூ. 3.5 லட்சம் மோசடி செய்தவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கோவை சின்ன வேடம்பட்டியைச் சேர்ந்தவர் டேனியல் ஆபிரகாம் மகன் ஜேம்ஸ். இவரிடம் வாட்ஸ் ஆப் மூலம் ஈரோடு மாவட்டம் மோலப்பாளையம் அருகே உள்ள சின்ன செட்டிபாளையத்தைச் சேர்ந்த அருண் (வயது 42) என்பவர் அறிமுகமானார்.
அப்போது அருண் ஜேம்ஸ்-யிடம் ஆஸ்திரேலியாவில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் தொடர்பாக வேலை காலியாக இருப்பதாகவும் அதற்கு வேலையைப் பெற்றுத் தருவதாகவும் கூறியுள்ளார். அதற்கு விசா உள்ளிட்ட பணி ரூ.3.5 லட்சம் பணம் வேண்டும் என்று கூறியுள்ளார்.
அந்த பணத்தை ஜேம்ஸ் கொடுத்துள்ளார். ஆனால் அருண் வேலை வாங்கி கொடுக்கவில்லை பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் அவரது தந்தை டேனியல் ஆபிரகாம் புகார் கொடுத்தார். அதன் பேரில் கோவை சைபர் கிரைம் காவல் துறையினர் விசாரணை நடத்தி அருணை கைது செய்தனர். இவர் மீது சேலம் மற்றும் திருச்சி ஆகிய இடங்களிலும் மேலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்து உள்ளது.

