தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக திருச்சி .உள்ளிட்ட11 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு, விடுமுறை
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை திங்கள் கிழமை (24.11.25) அறிவிக்கப்பட்டுள்ளது
தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (நவ.24), தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் டெல்டா பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, டெல்டா மாவட்டங்கள், நெல்லை, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய கனமழை விடாமல் பெய்துவருகிறது.
இந்த நிலையில், கனமழை காரணமாக திருச்சி, ராமநாதபுரம், திருவாரூர், கள்ளக்குறிச்சி,, தூத்துக்குடி, புதுக்கோட்டை, விருதுநகர், மயிலாடுதுறை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர். தென்காசி, நெல்லை மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் கனமழை காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

