தையல் பயிற்சி பள்ளி, நிதி நிறுவனம் என்ற பெயரில் கே.கே.நகரில் பகலில் மட்டும் விபச்சார விடுதி நடத்தி பல லட்சம் சம்பாதித்த 2 பெண்கள் கைது.
தங்களது கணவர்களுக்கே தெரியாமல் தையல் பயிற்சி பள்ளி, நிதி நிறுவனம் என்ற பெயரில் சென்னையில் விபச்சார விடுதி நடத்தி பல லட்ச ரூபாய் சம்பாதித்த 2 பெண்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பகலில் மட்டுமே நடந்து வந்த இந்த பலான தொழில் நடத்தப்பட்ட விதம் குறித்தான தகவல்களை நாம் அறிந்து கொள்ளலாம்..
சென்னை கே.கே. நகர் பகுதியில் உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் உள்ள பெரிய வீட்டில் பெண்களுக்கான தையல் பயிற்சி பள்ளியும், நிதி நிறுவனமும் செயல்படுவதாக வெளியே விளம்பரப் பலகை வைக்கப்பட்டிருந்தது. இங்கு ஏராளமான பெண்களும், ஆண்களும் தினந்தோறும் வந்து செல்வது வாடிக்கையாக இருந்தது. தையல் பயிற்சி பள்ளி மற்றும் நிதி நிறுவனம் என்ற பெயரில் இங்கு விபச்சாரத் தொழில் நடப்பதாக விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது.
இதனையடுத்து விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் அந்த தையல் பயிற்சி பள்ளி மற்றும் நிறுவன நிதி நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வியாசர்பாடியைச் சேர்ந்த கார்த்திகா தேவி (வயது 33) என்பவர் தையல் பயிற்சி பள்ளியின் மேலாளர் போலவும், ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த சுந்தரி (வயது 48) என்பவர் நிதி நிறுவனத்தின் மேலாளர் போலவும் அங்கு இருந்தனர். அவர்களிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் அங்கு விபச்சாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது.
மேலும் அங்கு உல்லாசத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 2 ஆண்களும், 2 அழகிகளும் கையும் களவுமாக போலீசில் சிக்கினர்.
தையல் பயிற்சி பள்ளியின் மேலாளராக நடித்த கார்த்திகா தேவியும், நிதி நிறுவன மேலாளராக நடித்த சுந்தரியும் விபச்சார விடுதியை நடத்தி வந்துள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர். இருவருமே 7ம் வகுப்பு வரை படித்துள்ளனர். தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு செல்வது போல தினமும் காலை வீட்டிலிருந்து புறப்பட்டு இந்த விபச்சார விடுதிக்கு வரும் இருவரும், மாலை வேலை முடிந்து செல்வது போல இரவில் மீண்டும் வீட்டிற்கு சென்று விடுவார்களாம்.
பகலில் மட்டுமே இந்த விபச்சார விடுதி செயல்பட்டு வந்துள்ளது. தங்களது கணவர்களுக்கே தெரியாமல் இப்படி ஒரு பலான தொழிலை இந்த 2 பெண்களும் செய்து வந்துள்ளது காவல்துறையினருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருவர் மீதும் ஏற்கனவே விபச்சார வழக்குகள் எதுவும் இல்லை என தெரிய வந்துள்ளது. இவர்கள் இருவரும் புதிதாக விபச்சார தொழிலை தொடங்கி லட்சக்கணக்கில் சம்பாதித்து வந்துள்ளனர்.

சென்னையில் இதுபோன்ற புதிய விபச்சார கலாச்சாரம் தொடங்கியுள்ளது என்பதை இந்த சம்பவம் மூலம் போலீசார் அறிந்து கொண்டுள்ளனர். மேலும் இதுபோல பெண்கள் தங்கும் விடுதி என்ற பெயரிலும் விபச்சார விடுதி செயல்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஏற்கனவே மசாஜ் கிளப் என்ற பெயரில் விபச்சார விடுதிகள் நடந்து வரும் நிலையில், நிதி நிறுவனம் என்ற பெயரிலும், தையல் பயிற்சி பள்ளி என்ற பெயரிலும், பெண்கள் தங்கும் விடுதி என்ற பெயரிலும், விபச்சார விடுதிகள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட கார்த்திகா தேவியும், சுந்தரியும் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதேபோல விபச்சார விடுதியில் இருந்து மீட்கப்பட்ட பெண்கள் இருவரும் அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்..

