கரூர் துயரசம்பவம் குறித்து உயர்நீதிமன்றம் சரியாகத்தான் சொல்லி இருக்கிறது:
விஜய்யை பார்த்து நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்; எது வந்தாலும் நாங்கள் சந்திப்போம்
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி.
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அரசு ஊரக சித்த மருத்துவமனை வளாகத்தில் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டும் பணிகளுக்கு, நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று
அடிக்கல் நாட்டி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், திருவரங்கம் சட்டமன்ற உறுப்பினர் எம்.பழனியாண்டி, மணிகண்டன் ஒன்றிய திமுக செயலாளர் மாத்தூர் கருப்பையா,
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரணி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மா.வத்சலா மற்றும் மருத்துவர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:-
ஏற்கனவே செயல்பட்டுக்கொண்டிருந்த சித்த மருத்துவமனை ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்வதற்காக அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
கரூர் சம்பவத்திற்கு திமுகதான் பொறுப்பேற்க வேண்டும் என எடப்பாடி கூறியது என்ற கேள்விக்கு, அவர் வேறு என்ன சொல்லமுடியும் செய்ய முடியும், நேற்று முதலமைச்சர் கூறியதை கேட்டீர்களா? தமிழகத்தில் பல்வேறு பிரச்சனைகள் நடைபெற்று வருகிறது, வெள்ளம் வந்தது அதற்குகூட பணம் வழங்கவில்லை .
அப்போதுகூட வராத பாஜக எம்பிக்கள் குழு உடனடியாக இந்த நிகழ்வுக்கு வருவதற்கு காரணம் என்ன என்றும் முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார் .
அதுமட்டுமின்றி, பாஜக கூட்டணியில் அதிமுகவும் இருப்பதால் அதுபோன்றுதான் பேசுவார், மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள் நீதிமன்றத்தில் கூறியதுதான் உண்மை நிலைமை.
கரூர் துயர சம்பவம் குறித்து உயர்நீதிமன்றம் சரியாகத்தான் சொல்லி இருக்கிறது விஜய் நேரில் வந்து பார்க்கவில்லை என பத்திரிகை மற்றும் ஊடகங்கள் கூறுகிறது.
விஜய் கூட்டத்திற்கு அனுமதி வாங்கியவர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள்மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது, ‘
நீதிமன்றம் அக்கட்சி பற்றி கூறி இருக்கிற நிலையில் அவர்களை (விஜய்யை) பார்த்து நாங்கள் ஏன் பயப்படவேண்டும், பயந்து நாங்கள் என்ன செய்யப் போகிறோம்? எது வந்தாலும் நாங்கள் சந்திப்போம் .
இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.