திருச்சி மாநகராட்சி பகுதிகளில் மனிதக்கழிவுகளை மனிதர்களே அல்லும் அவலம். 2 முக்கிய திமுக அமைச்சர்கள் இருந்தும், 2 உயிர்கள் பலி. யார் பொறுப்பு? அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் கேள்வி .
திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் மாவட்ட உறுப்பினருமான ப. செந்தில்நாதன் கேள்வி.
திருச்சி மாநகராட்சி பகுதிகளில் மனிதக்கழிவுகளை மனிதர்களே அல்லும் அவலம். இரண்டு முக்கிய திமுக அமைச்சர்கள் இருந்தும், இரண்டு உயிர்கள் பலி. யார் பொறுப்பு?
மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் தொழிலாளர்களாக பணியமர்த்துவதை தடை செய்தல் சட்டங்களை கடுமையாக அமல்படுத்த, மதிப்பிற்குரிய நீதிமன்றங்கள் அறிவுறுத்திய போதிலும்,
இரண்டு திமுக அமைச்சர்களை கொண்ட திருச்சி மாவட்டத்தில், இதிலும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வசிக்கும் திருச்சி மாவட்டத்தில், விஷவாயு தாக்கி பாதாள சாக்கடை குழிக்குள்ளேயே உயிரிழந்த பரிதாபம் ஒட்டுமொத்த திருச்சி மாவட்டத்தை உலுக்கியுள்ளது.
திருச்சி மாநகராட்சி 40 வது வார்டுக்குட்பட்ட திருவெறும்பூர் பிரகாஷ் நகர் விரிவாக்கப் பகுதியில், பாதாள சாக்கடை குழி அடைப்பு நீக்கும் பணியில், மேற்பார்வையாளர்கள் சட்டத்திற்கு புறம்பாக நிர்பந்தித்ததன் விளைவாக, பாதாள சாக்கடைக்குள் இறங்கி வேலை செய்த இரு அப்பாவி பணியாளர்கள், சேலம் மாவட்டத்தை சேர்ந்த பிரபு (வயது 32) மற்றும் புதுக்கோட்டை திருவப்பூரைச் சேர்ந்த ரவி (வயது 38) ஆகியோர், விஷவாயு தாக்கி பாதாள சாக்கடை குழிக்குள்ளேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
நடந்த சம்பவத்திற்கு தனியார் ஒப்பந்தக்காரர்கள் மீது பழி போட்டாலும், பாதாள சாக்கடை அடைப்பு எடுக்கும் பணியை, தனியாருக்கு ஒப்பந்தம் கொடுத்தாலும், அதை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு திருச்சி மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களையே சார்ந்தது.
எனவே திருச்சி மாவட்ட காவல்துறை, சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு இரண்டு துர் மரணங்களுக்கு காரணமான ஒப்பந்தக்காரர்கள் மற்றும் இதை நிர்வாகிக்க தவறிய அதிகாரிகள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுத்து, சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யுமாறு கோரிக்கை வைக்கின்றோம்.
தற்போது, பாதாள சாக்கடை இணைப்பு என்கின்ற பெயரில், தனியார் ஒப்பந்தக்காரர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் 10,000 முதல் 30,000 வரை கட்டாய வசூலில் ஈடுபடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
பொதுமக்களிடம் நாம் கேட்டுக் கொள்வதெல்லாம், பாதாள சாக்கடை அடைப்பு எடுக்கும் பணிகளில், மனிதர்கள் ஈடுபடுத்தப்படுவதை. கண்டால், உடனடியாக அருகில் உள்ள காவல்துறை அதிகாரிகளிடம் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்
என ப.செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்