பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்திக்க நயினார் நாகேந்திரன் டெல்லி சென்ற நிலையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை டிடிவி தினகரனை சந்தித்து பேசியது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நயினாருக்கு எதிராக அண்ணாமலை களம் இறக்கப்பட்டுள்ளாரா? என்ற கேள்வி பாஜக தொண்டர்களிடையே எழுந்த நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
சட்டமன்றத் தேர்தலை சந்திக்க பாஜகவில் ஐந்து குழுக்கள் நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதற்கு ஒருங்கிணைப்பாளராக அண்ணாமலை இருப்பதாகவும், சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியை ஒருங்கிணைக்கும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு வருடம் இருக்கும்போதே அதிமுக பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியது. மக்களவைத் தேர்தலில் உடைந்த கூட்டணி சட்டமன்றத் தேர்தலுக்காக மீண்டும் ஒட்டவைக்கப்பட்டது.
கூட்டணிக்காக எடப்பாடி பழனிசாமி பல நிபந்தனைகளை விதித்திருந்தார். குறிப்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை மாற்ற வேண்டும், ஓபிஎஸ், டிடிவி தினகரன் கூட்டணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனைகள். முதல் நிபந்தனை உடனடியாக நிறைவேற்றப்பட்டது. தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை நீக்கப்பட்டு புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார்.
டிடிவி தினகரன் அதிமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அதிமுக பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்த நிகழ்வுகளில் ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் புறக்கணிக்கப்பட்டனர். எடப்பாடி பழனிசாமியின் பேச்சைக் கேட்டு தங்களைப் புறக்கணிப்பதாகக் கூறி டிடிவி தினகரனும் ஓபிஎஸ்ஸும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தனர். அவர்களைச் சமாதானப்படுத்தும் முயற்சியை பாஜக தொடங்கி இருக்கிறது.
அதனை உறுதி செய்து பேசியிருந்தார் அண்ணாமலை. நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் டிடிவி தினகரனுடன் பேசியது என்ன என்பது குறித்துத் தெளிவாக விளக்கியிருந்தார் அண்ணாமலை. தமிழக பாஜக தலைவர் இருக்கும்போது முன்னாள் தலைவர் எதற்காக கூட்டணி குறித்துப் பேசுகிறார் என்ற கேள்வி பொது வெளியில் இருந்தது. இந்த நிலையில் தேசிய தலைமையின் அனுமதி பெற்று அண்ணாமலை இந்த ஒருங்கிணைப்பு நடவடிக்கையை எடுத்து இருக்கிறார் என்கின்றனர் தமிழக பாஜகவினர். கடந்த வாரம் பாஜக பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில், புதிய குழுக்கள் உருவாக்கப்பட்டன.
அதாவது கூட்டணியை ஒருங்கிணைக்கும் ஐந்து குழுக்களுக்குத் தலைவர்களாக வானதி சீனிவாசன், தமிழிசை சௌந்தரராஜன், எச். ராஜா உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டனர். இந்த ஐந்து குழுக்களையும் ஒருங்கிணைக்கும் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பைத்தான் அண்ணாமலை பெற்றிருக்கிறார். கடந்த காலங்களில் ஓபிஎஸ், டிடிவி தினகரனுடன் நெருக்கம் காட்டிய அண்ணாமலை, பாமக, தேமுதிக உடனும் இணக்கமான உறவைப் பேணி வருகிறார்
அதன் காரணமாகவே தற்போது இந்த ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பு அண்ணாமலைக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இதற்கிடையே அண்ணாமலை மீண்டும் பாஜக கூட்டணியை ஒருங்கிணைக்கும் பொறுப்புக்கு வந்திருப்பதால் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதே நேரத்தில் நயினார் நாகேந்திரன் தலைவராகப் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே கூட்டணி உடைபட்டதால் அவரை மாற்றலாம் எனவும் சமூக வலைத்தளங்களில் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் பதிவிட்டு வருகின்றனர்.