திமுகவுக்கு ஆதரவான ஜவாஹிருல்லாவின் மனிதநேய மக்கள் கட்சி, தமிமுன் அன்சாரியின் மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட 807 கட்சிகளின் அங்கீகாரம் அதிரடி ரத்து
6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத மற்றும் விதிமுறைகளை மீறும் கட்சிகளின் அங்கீகாரத்தை தேர்தல் கமிஷன் அவ்வப்போது ரத்து செய்து வருகிறது.
இந்நிலையில், தற்போதைய சீர்திருத்தத்தில், தமிழகத்தில் 42 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, ஜவாஹிருல்லாவின் மனிதநேய மக்கள் கட்சி, ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், தமிமுன் அன்சாரியின் மக்கள் ஜனநாயக கட்சி, ஈஸவரனின் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, என்.ஆர்.தனபாலனின் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் பதிவு ஆகியவற்றை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.
இந்தியா முழுவதும் பிரதான கட்சிகள் தவிர்த்து சிறிய சிறிய கட்சிகளும், லெட்டர் பேடு கட்சிகளும் இருக்கின்றன. ஆட்களே இல்லாவிட்டாலும் ஒருவரால் கட்சி ஆரம்பிக்க முடியும். அப்படி நம் நாட்டில் கட்சிகள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. தமிழகத்திலும் அப்படித்தான்.
இந்த நிலையில் பெயருக்கு கட்சியை ஆரம்பித்து விட்டு வரி விலக்கு உள்ளிட்ட சலுகைகளை பெறுவதாக புகார் எழுந்தது. இதனை அடுத்து இந்திய தேர்தல் ஆணையம் 345 பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை (RUPPs) முதற்கட்டமாக பட்டியலிலிருந்து நீக்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் அதிரடி நடவடிக்கை:
2019 முதல் கடந்த 6 ஆண்டுகளாக ஒரு தேர்தலில்கூட போட்டியிட வேண்டும் என்ற அத்தியாவசிய நிபந்தனையை நிறைவேற்றத் தவறியுள்ள மற்றும் இருப்பிடம் கண்டறிய முடியாத கட்சிகள் என்பதன் காரணமாக 345 பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை முதற்கட்டமாக பட்டியலிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. எனவே, நாடு முழுவதும் இத்தகைய கட்சிகளை அடையாளம் காணும் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.
இதன்டிப்படையில் 345 கட்சிகள் தற்போது வரை அடையாளம் காணப்பட்டுள்ளன. தமிழகத்தில் அது போன்று 64 அரசியல் கட்சிகள் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அந்த பட்டியல் தமிழ்நாடு தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அந்த கட்சிகளுக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டது. தொடர்ந்து அவர்களிடம் பெறப்பட்ட விளக்கத்தின் அடிப்படையில், தேசிய அளவில் 800க்க்ம் மேற்பட்ட கட்சிகளின் பதிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்து இருக்கிறது.
மேலும் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் பதிவை கடந்த மாதம் முதற்கட்டமாக 334 என்ற எண்ணிக்கையில் தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. தற்போது இரண்டாம் கட்டமாக 474 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. மொத்தம் இரண்டே மாதங்களில் 800-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெறாத கட்சிகளின் எண்ணிக்கை 2046 ஆக குறைந்திருக்கிறது.
மனிதநேய மக்கள் கட்சி:
இந்த நிலையில் தமிழகத்தில் திமுக கூட்டணி மற்றும் திமுக ஆதரவு கட்சிகள், அதிமுக ஆதரவு கட்சிகளின் பதிவும் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. குறிப்பாக எம்எல்ஏ ஜவாஹிருல்லாவை தலைமையாகக் கொண்டு செயல்பட்டு வரும் மனிதநேய மக்கள் கட்சி, முன்னால் எம்எல்ஏ தமீமுன் அன்சாரியின் மக்கள் ஜனநாயக கட்சி, ஜான் பாண்டியன் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், திருச்செங்கோடு எம்.எல்.ஏ ஈஸ்வரனின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, என்ஆர் தனபாலனின் பெருந்தலைவர் மக்கள் கட்சி எர்ணாவூர் நாராயணன் கட்சி உள்ளிட்ட 42 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழக கட்சிகள் விபரம்:
மனிதநேய மக்கள் கட்சிக்கு இரண்டு எம்எல்ஏக்கள் இருந்தாலும் அவர்கள் இருவரும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டும் அல்லாமல் அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி, அகில இந்திய மக்கள் நல்வாழ்வு கட்சி, எழுச்சி தேசம் கட்சி, சமத்துவ மக்கள் கழகம், தமிழர் தேசிய முன்னணி, தமிழர் முன்னேற்ற கழகம், விடுதலை மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் அங்கீகாரமும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.